நா.த.க., வேட்பாளர்கள் பிப்ரவரியில் அறிவிப்பு
சென்னை: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், வரும் 2026 பிப்., 7ம் தேதி நடக்கும் மக்களின் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளனர். நா.த.க., சார்பில், கடல் மாநாடு, ஆடு, மாடு மாநாடு, மலை மாநாடு, தண்ணீர் மாநாடு என, தொடர்ச்சியாக மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு, திருச்சியில், 2026 பிப்., 7ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில், 234 தொகுதிக்கான நா.த.க., வேட்பாளர்களை, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். அத்துடன், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என, நா.த.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நா.த.க., வினர் கூறியதாவது: நாம் தமிழர் கட்சியை தமிழகத்தின் பிரதான கட்சிகள், தங்கள் கூட்டணியில் இணையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தனித்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியாக உள்ளார். அதனால், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை களமிறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்போதே, கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. வழக்கம்போல், தலா 117 ஆண்களும், பெண்களும் போட்டியிட உள்ளனர். அவர்கள், வரும் பிப்., 7ல் நடக்கும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு, மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மத்தியில் அறிமுகப் படுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.