சென்னை: 'சூரியசக்தி மின் திட்டத்திற்கு விரைந்து அனுமதி அளிப்பதுடன், திட்டம் துவங்குவது முதல் செயல்பாட்டிற்கு வரும் வரை காணப்படும் இடர்ப்பாடுகள் களையப்பட வேண்டும்' என்று மின் வாரிய அதிகாரிகளிடம், தொழில் துறையினர் வலியுறுத்தினர்.தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்கை வெளியிடப்பட உள்ளது. கோரிக்கை
அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், தொழில் துறையினரிடம், வாரிய உயர் அதிகாரிகள் கருத்து கேட்டனர். தொழில் துறையினர் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.இது குறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் வாரியத்திடம் வழங்கி, தேவை ஏற்படும் போது மீண்டும் பெற்றுக் கொள்ளும், 'பேங்கிங்' வசதி தொடர வேண்டும். இதற்காக, மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை சரி செய்து கொடுப்பதற்கு, காற்றாலை உற்பத்தியாளர்கள் முன்வந்துள்ளனர். இந்த விபரம், அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இடர்ப்பாடுகள்
மேலும், 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலைகளை, தொடர்ந்து இயக்க அனுமதிக்க வேண்டும். மேற்கூரை சூரியசக்தி மின்சாரத்துக்கு, 'நெட்வொர்க்' சார்ஜ் ரத்து செய்யப்பட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. சூரியசக்தி மின் திட்டத்திற்கு விரைந்து அனுமதி அளிப்பதுடன், அத்திட்டம் துவங்குவது முதல், செயல்பாட்டிற்கு வருவது வரை உள்ள இடர்ப்பாடுகளை களைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.புதுப்பிக்கத்தக்க மின் கொள்கையை உருவாக்க, தொழில் துறையினர் இடம் பெறும் துணை குழுவை நியமிப்பதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.