திருப்பூர்: 'மத்திய அரசு, ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு, பின்னலாடை உற்பத்தி தொழிலையும், சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவேண்டும்' என, திருப்பூரில் அனைத்து பனியன் தொழிற் சங்கங்கள், பிரதமருக்கு கலெக்டர் வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளன.இந்திய பொருட்களுக்கு, இரண்டு கட்டங்களாக, 50 சதவீதம் வரியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது, கடந்த, 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், திருப்பூரில், அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்துள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து, ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - எம்.எல்.எப்., - எச்.எம்.எஸ்., - பி.எம்.எஸ்., - டி.டி.எம்.எஸ்., - ஐ.என்.டி.யு.சி., - ஏ.டி.பி., ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலெக்டர் வாயிலாக, பிரதமருக்கு மனு அளித்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின், 50 சதவீத வரி விதிப்பு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கான, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் பிரதமர் மோடி, ராஜதந்திர போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு, பின்னலாடை உற்பத்தி தொழிலையும், அதனை சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவேண்டும். நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டங்களை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். நிறுவனங்கள், வங்கியில் பெற்றுள்ள கடன்களுக்கு, வட்டி மானியம் வழங்க வேண்டும். 'டியூட்டி டிராபேக்' தொகையை அதிகரித்து, அமெரிக்கா அல்லாத மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கூடுதல் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும். நெருக்கடியான இச்சூழலில், மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். எனவே, மத்திய அரசு, மாற்று வழிகளை ஆராய்ந்து, அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும். எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமருக்கு தனித்தனியாக கடிதமும் அனுப்பி உள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.