உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் முன் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்

மக்கள் முன் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்

சென்னை: தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: சமீபத்தில், சென்னையில் நடந்த ஆழ்வார் ஆய்வு மையத்தின் விருது வழங்கும் விழாவில், வைரமுத்துவுக்கு கம்பன் விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்றுக் கொண்டு பேசிய வைரமுத்து, 'திகைத்தனை போலும் செய்கை' என்ற வரிகளை மேற்கோள் காட்டி, ராமருக்கு புத்தி சுவாதீனம் இல்லை என, பேசியிருந்தார். அறிவு இருக்கும் எந்த தமிழ் அறிஞரும், திகைத்தல் என்ற சொல்லுக்கு வைரமுத்து சொன்ன அர்த்தத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார். வேண்டுமென்றே திட்டமிட்டு, ஹிந்து கடவுள்களை தவறாக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் வைரமுத்து. ஏற்கனவே ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதை, மக்கள் மறக்கவில்லை. கண்டனங்கள் அதிகமாகியதும், மன்னிப்பு கேட்டார். இப்போது ராமரை மோசமாக விமர்சித்திருக்கிறார். இது, ஆணவத்தின் உச்சம். சினிமா பாடல் வாய்ப்பு கிடைக்காமல் வீட்டில் இருக்கும் வைரமுத்து, தன்னை பற்றி ஏதாவது பேசமாட்டார்களா என ஏங்கித் தவித்து, ஹிந்து தெய்வங்களை குறைத்து பேசியுள்ளார். இந்த பேச்சுக்காக மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வக்கிரபுத்தி படைத்தவர் கவிஞர் வைரமுத்து

சென்னையில் நடந்த கம்பன் விழாவில் பரிசை பெற்றுக்கொண்டு, ராமபிரானை புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று கேவலப்படுத்தி பேசியது வைரமுத்துவின் வக்கரப்புத்தி. ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன் அவர், ஆண்டாளை தாசி என்று கேவலப்படுத்திப் பேசினார். வாய்க்கு வந்தபடி பேசுவது, வைரமுத்துவுக்கு அழகல்ல. சீதையை பிரிந்த ராமன், புத்தி சுவாதீனம் இல்லாத மனிதர் என்று பேசி, ஹிந்துக்கள் உணர்வை கொச்சைப்படுத்தி இருக்கிறார். இதற்காக, அவர் மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோராவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வோம். கருத்து சுதந்திரத்திற்கு அளவுகோல் உண்டு என்பதை யாரும் மறக்கக்கூடாது. - பம்மல் ராமகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பிராமணர் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை