அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வன்னியர் சங்க மாநாடு: பா.ம.க., விளக்கம்
சென்னை:அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே, கும்பகோணத்தில் வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படுவதாக, பா.ம.க., விளக்கம் அளித்துள்ளது.அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் சமய, சமுதாய நல்லிணக்கத்திற்காக, அதிகம் பாடுபட்ட ஒரு தலைவர் உண்டென்றால், அது ராமதாஸ் தான். தமிழகத்தில் பல சமுதாயங்களிடையே, காலம் காலமாக நிலவி வந்த பகையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அவற்றை ஒருங்கிணைத்து, சமூக உரிமை கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி, சமூக சகோதரத்துவ மாநாட்டை, மாவட்டம்தோறும் நடத்தியவர் ராமதாஸ்.முஸ்லிம்கள், அருந்ததியர்களுக்காக, போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தி, உள்இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார். வன்னியர், பட்டியலினத்தவர் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க, அதிக எண்ணிக்கையில், அம்பேத்கர் சிலைகளை திறந்தார். குடிதாங்கி கிராமத்தில் பட்டியலின சகோதரரின் உடலை தன் தோளில் சுமந்து சென்று, அடக்கம் செய்ய வைத்தார்.அதன் தொடர்ச்சியாகவே, வன்னியர் சங்கம் சார்பில், வரும் 23ம் தேதி, கும்பகோணத்தில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடக்கவுள்ளது. அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இனம், மொழி, மதத்தின் அடிப்படையில் ஒடுக்கப்படுவதோ, உரிமை பறிக்கப்படுவதோ கூடாது, ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒரே இனம் என்ற தத்துவம் கூடாது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக பழக வேண்டும். வெறுப்பு பிரசாரங்களை தடுக்க வேண்டும். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற திருமூலரின் தத்துவம் செயலாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நோக்கங்களுக்காகவே, கும்பகோணத்தில் மாநாடு நடத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.