புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக்குங்கள் அரசுக்கு பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தல்
சென்னை:'இந்தியாவில் புற்றுநோயை, அறிவிக்கப்பட்ட நோயாக அறிவிக்க வேண்டும்' என, அப்போலோ புற்றுநோய் மையம், இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.உலக புற்றுநோய் தின அனுசரிப்பையொட்டி, அப்போலோ புற்றுநோய் மையம், இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்கள் சங்கம், தமிழ்நாடு அறுவை சிகிச்சை புற்று நோயியல் நிபுணர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை புற்று நோயியல் மருத்துவ சங்கம் ஆகியவை இணைந்து, 'இந்தியா முழுதும், புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என வலியுறுத்தி, பரப்புரை திட்டத்தை துவக்கி உள்ளன.சென்னையில் நடந்த துவக்க விழாவில், இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்கள் சங்கத்தின், தமிழக, புதுச்சேரி கிளை தலைவர் பாலசுந்தரம் பேசியதாவது:இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர், புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள், 15.7 லட்சமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக வகைப்படுத்த வேண்டும். தற்போது வரை, இந்தியாவில் புற்றுநோயால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விபரங்கள், முழுமையற்ற, குறைவான தரவின் அடிப்படையில் உள்ளன. அறிவிக்கப்பட்ட நோயாக இருக்கும்போது, பாதிப்பின் விபரங்களை சேகரிப்பதுடன், புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான, செயல் திட்டங்களையும் வகுக்க முடியும். எனவே, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கப்பட்ட நோயாக புற்றுநோயை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.