உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி., மாவட்ட நிர்வாகம் கலைப்பு 234 மா.செ.,க்கள் நியமிக்க முடிவு

வி.சி., மாவட்ட நிர்வாகம் கலைப்பு 234 மா.செ.,க்கள் நியமிக்க முடிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 234 சட்டசபை தொகுதிகளிலும், மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளதால், தற்போதைய மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஜூலை மாதத்தில், புதியதாக, 144 மாவட்ட செயலர்கள், மண்டல செயலர்கள், மண்டல துணைச் செயலர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழக கட்சிகளில், அதிக மாவட்ட செயலர்கள் உள்ள கட்சி இதுதான்.இதற்கிடையில், தமிழக முதல்வர் வேட்பாளராக திருமாவளவனை அறிவித்து, தேர்தல் களம் காணும் வியூகத்தையும், வி.சி., நிர்வாகிகள் திரைமறைவில் செய்து வருகின்றனர்.'மாநிலத்தில் அதிகாரம், மத்தியில் அங்கீகாரம்' என்ற தேசிய அரசியலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர். 'திருமாவளவனை முதல்வராக்குவது எங்கள் கனவு' என, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு, சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.இந்நிலையில், வி.சி., கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள் கலைக்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகம் முழுதும், 234 மாவட்ட செயலர்களை அறிவிக்க இருக்கிறோம். இவர்களோடு சேர்த்து, மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக அறிவிக்கப்படுவர்.தமிழகம் முழுதும் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளின் பதவிகளை ஆய்வு செய்து, தலைமைக்கு பரிந்துரை செய்ய, ஒரு மாவட்டத்திற்கும் 3 முதல் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.இந்தக் குழு ஆய்வு செய்து, ஒவ்வொரு பொறுப்புக்கும், 3 பெயர்களை தலைமைக்கு பரிந்துரை செய்யும். அப்படி பரிந்துரை செய்யப்படும் மூவரில், ஒருவர், ஒரு பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.இந்தக் குழு இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒரு குழு அமைக்கப்படும். தமிழகத்தில் 234 மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக அறிவிக்கப்பட்ட பின், ஒன்றிய, நகர நிர்வாகிகள் முழுமையாக அறிவிக்கப்படுவர். இப்பணிகள் மேற்கொள்ள, இன்னும் 3 வாரங்கள் தேவைப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை