பண்ருட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு ரூ.1.88 லட்சம் பறிமுதல்
பண்ருட்டி: பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் ரெய்டில் 1.88 லட்சம் ரூபாய் சிக்கியது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள், மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சம்பந்தமில்லாத புரோக்கர்கள், வெளிநபர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன் மாவட்ட ஆய்வுகுழு அலுவலக ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4:00 மணியளவில் பண்ருட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 88 ஆயிரத்து 100 ரூபாய் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து டிரைவிங் ஸ்கூல் நடத்துபவர்கள் , அலுவலக சம்பந்தமில்லாத புரோக்கர்கள், அலுவலக ஊழியர்களிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.