பனையூரில் பதுங்கும் விஜய்: திக்கு தெரியாமல் திருமா
மதுரை: ''நடிகர் விஜய் பனையூரில் இருந்து வெளியே வர வேண்டும். மக்களை சந்தித்து அரசியல் செய்ய வேண்டும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார். அவர் அளித்த பேட்டி: தி.மு.க., அமைச்சர்கள் அத்தனை பேரும் அமலாக்கத் துறை சோதனை வந்துவிடுமோ என பதற்றத்திலும், அச்சத்திலும் உள்ளனர். மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய அளவில் சொத்து வரி தொடர்பான மோசடி நடந்து இருக்கிறது. ஐந்து மண்டல தலைவர்கள், நிலைகுழு தலைவர்கள் என பலரையும் பதவிநீக்கம் செய்ய வைத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும், அவருடைய நடவடிக்கையில் திருப்தி இல்லை. மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்தை, சொத்து வரி மோசடி தொடர்பாக கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டில், மேயர் இந்திராணிக்கு எந்தளவுக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தெரியவில்லை. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திடுமென எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து ஏன் விமர்சித்தார் என தெரியவில்லை. ஆனால், அவர் பாதை மாறி, நாட்டிலிருந்து காட்டுக்குள் போய் விட்டார். வேங்கைவயல் பிரச்னையில், அவர் இதுவரை தேடிய தீர்வு என்ன? நெல்லை வாலிபர் கவின் ஆணவ கொலையில், எந்த நீதி கேட்டு திருமாவளவன் போராடினார்? சமீபகாலமாக, அவர் கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருக்கிறார். மக்கள் சேவையுடன் கூடிய அரசியல் செய்ய வேண்டும் என்றால், நடிகர் விஜய் பனையூரில் இருந்து வெளியே வர வேண்டும். மக்களை சந்தித்து, அரசியல் செய்ய வேண்டும். இதை செய்யவில்லை என்றால், வரும் சட்டசபை தேர்தலிலேயே அவர் காணாமல் போய்விடுவார். எல்லாரும் எம்.ஜி.ஆராக முடியாது. தமிழகத்திற்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.,தான் இருக்க முடியும். அவரும் மறைந்து விட்டார். இவ்வாறு செல்லுார் ராஜு கூறினார்.