உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் பிரசாரம் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு த.வெ.க. தலைமை அறிவிப்பு

விஜய் பிரசாரம் இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பு த.வெ.க. தலைமை அறிவிப்பு

சென்னை: விஜயின், அடுத்த இரு வாரங்களுக்கான பிரசாரம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, த.வெ.க., தலைமை அறிவித்துள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், தன் பிரசாரத்தை, செப்., 13ல் திருச்சியில் துவங்கினார். திருச்சி மரக்கடை பகுதியில், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, தன்னுடைய முதல் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை துவங்கி பேசினார். தொடர்ந்து, ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், சில நாட்கள் ஞாயிற்றுகிழமைகளிலும் பிரசாரம் மேற்கொள்ள பயண திட்டம் வகுத்திருந்தார். அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, பயண அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 27ம் தேதி, விஜய் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட, 41 பேர், பரிதாபமாக இறந்தனர். இந்தச் சம்பவம், தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின், த.வெ.க., தலைவர் விஜய், சமூக வலைதளம் வழியே இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து, கடந்த 30ம் தேதி, வீடியோ பதிவு வெளியிட்டு, இரங்கல் தெரிவித்திருந்தார். அதில், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், விஜயின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான பிரசார பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, த.வெ.க., தலைமை அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில், 'நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும், வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், தலைவர் விஜயின், அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள், பின்னர் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை