உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓராண்டுக்கும் மேலாக சம்பளமின்றி பணியாற்றும் கிராம கணக்காளர்கள்; ஊரக வளர்ச்சி பணியாளர்கள் துணை முதல்வரிடம் மனு

ஓராண்டுக்கும் மேலாக சம்பளமின்றி பணியாற்றும் கிராம கணக்காளர்கள்; ஊரக வளர்ச்சி பணியாளர்கள் துணை முதல்வரிடம் மனு

மதுரை; 'கிராமங்களில் பணியாற்றும் வறுமை ஒழிப்பு கணக்காளர்கள் 7 ஆயிரம்பேருக்கு 6 மாதம் முதல் ஓராண்டு வரை சம்பளம் வழங்காததால் வேதனைப்படுவதாக' ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதியிடம் மனு அளித்துஉள்ளனர்.தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவ்ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராம வறுமை ஒழிப்பு கணக்காளர்கள் (வி.பி.ஆர்.சி.,), ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர்கள் (பி.எல்.எப்.,) 2007 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஊராட்சிகளில் உள்ள மகளிர் குழுவினருக்கு கடன் வழங்குதல், மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோருக்கு உதவி செய்தல்,இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் மைய பொறுப்பாளர்கள், துாய்மைக் காவலர்கள், பள்ளியில் துாய்மைக் காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள், ஊராட்சி கணினி இயக்குனர்கள், ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான பதிவேடுகளை பராமரித்தல், அரசு நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இப்பணியாளர்களுக்கு அரசு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குகிறது. மகளிர் குழுவுக்கு வழங்கும் கடன் தொகையில் வசூல் ஆகும் வட்டியில் இருந்து இந்தச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் பல ஊராட்சிகளில் கடனுக்கான வட்டி வசூல் சரியாக நடக்காது. இதனால் 7000 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பல மாதங்களாக இப்பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு சம்பளம் வழங்க தனி நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல மாதங்களாக தமிழக ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். கலெக்டர், இயக்குனர், அரசு செயலர்கள் என பலதரப்பிலும் மனு கொடுத்துள்ளனர். ஆனால் பதில் கிடைக்கவில்லை.எனவே இச்சங்கத்தின்மாநில தலைவர் சார்லஸ், பொதுச் செயலாளர் ரவி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன்,பொருளாளர் பெரியசாமி ஆகியோர் துணை முதல்வர் உதயநிதியிடம் மனு அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் ''பல ஆயிரம் கிராம கணக்காளர்களுக்கு ஆறுமாதங்கள் முதல் ஓராண்டுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் தாமதமானால் பிப்ரவரியில் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துஉள்ளோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vinoth kumar
ஜன 07, 2025 05:53

நான் கணினி இயக்குபவர் ஆக வேலை செய்து வருகிறேன். எனக்கும் 3 முதல் 6 மாதங்கள் வரை சம்பளம் வரவில்லை. இடையிடையே சம்பளம் போட்டாலும் சரியாக போடாமல் இழுத்தடிப்பு செய்தே கிடைக்க பெறுகிறேன். அரசின் நேரடி சம்பளமாக பெற அரசு முயற்சி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.


Ammu Ammu
ஜன 06, 2025 20:07

கணக்காளர் ஊதியம் இல்லாமல் வேலை பாக்குறேன் ஐயா வணக்கம்


சம்பா
ஜன 06, 2025 11:22

இப்படி ஒரு பதவி இருக்கு தா


சமீபத்திய செய்தி