பெண் போலீஸ் மீதான புகார் விசாகா கமிட்டி விசாரணை
சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் போலீசார் இருவர், சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி மகேஷ்குமார் மீது, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம், பாலியல் தொல்லை புகார் அளித்தனர். இதுகுறித்து, சிவில் சப்ளை சி.ஐ.டி., - டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையிலான விசாகா கமிட்டி விசாரித்து, அரசுக்கு அறிக்கை அளித்தது. அதைத்தொடர்ந்து, மகேஷ்குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகேஷ்குமார் மனைவி அனுராதா, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலிடம் புகார் மனு அளித்தார். என் கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் போலீஸ் பொய் புகார் அளித்துள்ளார். அவர் என் கணவருடன், ஓராண்டாக தகாத உறவில் இருந்தார். என் கணவரிடம், 25 லட்சம் ரூபாய் கேட்டு, அவர் தராததால், எங்கள் குடும்பத்தை நாசம் செய்து விட்டார் என்று, மனுவில் கூறியுள்ளார்.மகேஷ்குமாருடன் சம்பந்தப்பட்ட பெண் போலீஸ், சில இடங்களுக்கு சென்ற, 'வீடியோ' காட்சிகளையும் ஒப்படைத்துள்ளார். அனுராதா அளித்த புகார் மனு குறித்து, விசாகா கமிட்டி விசாரித்து வருகிறது. அத்துடன், பெண் போலீஸ் மொபைல் போனுக்கு, மகேஷ்குமார் அனுப்பிய குறுஞ்செய்திகள், இருவருக்கும் நடந்த உரையாடல்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.