சைபர் பாதுகாப்பில் இரட்டை பட்டப்படிப்பு ஆஸி., பல்கலையுடன் வி.ஐ.டி., ஒப்பந்தம்
சென்னை:சென்னை வி.ஐ.டி., பல்கலை, ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலையுடன் இணைந்து, 'சைபர்' பாதுகாப்பு துறை சார்ந்த, ஒருங்கிணைந்த இரட்டை பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. சைபர் பாதுகாப்பு துறை சார்ந்த இரட்டை பட்டப்படிப்பை வழங்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலையுடன், சென்னை வி.ஐ.டி., பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தத்தில், வி.ஐ.டி., துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், டீகின் பல்கலை இணை டீன் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் வாயிலாக, சென்னை வி.ஐ.டி., பல்கலையில், சைபர் பாதுகாப்புக்கான கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டத்தையும், டீகின் பல்கலையில், சைபர் பாதுகாப்பு குறித்த 'ஹானர்ஸ்' பட்டத்தையும், மாணவ - மாணவியர் பெற முடியும். முதலில், சென்னை வி.ஐ.டி.,யில், கணினி அறிவியல், நெட்வொர்க் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படைத் திறன்களை மாணவர்கள் கற்பர். பின், டீகின் பல்கலையில், சைபர் பாதுகாப்பு, நிர்வாகம் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெறுவர். இதற்காக, துறைசார்ந்த நிபுணர்களால் பாடத்திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கட்டடக்கலை, கட்டுமான மேலாண்மை துறைகளிலும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வடிவமைப்பு, மெகாட்ரானிக்ஸ், தரவுத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் கட்டுமான மேலாண்மை உள்ளிட்டவை இடம்பெறும். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில், வி.ஐ.டி., துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேசுகையில், “ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில், டீகின் பல்கலையுடன் இணைந்து செயல்படுகிறோம். ''தற்போது, சைபர் பாதுகாப்பு துறையில், இரண்டு பட்டங்களைப் பெறும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குவதுடன், அந்த துறையில் சிறப்பிடம் பெற உதவுகிறோம்,” என்றார். டீகின் பல்கலை இணை டீன் பாஸ்கரன் பேசுகையில், “தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பட்டப்படிப்பினால், உலகை தொழில்நுட்ப ரீதியில் வழிநடத்தும் வகையில் திறன் மிக்க மாணவர்களை உருவாக்க முடியும்,” என்றார். சைபர் பாதுகாப்பு துறைக்கான புதிய படிப்பை வழங்க, சென்னை வி.ஐ.டி., மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வி.ஐ.டி., துணை தலைவர் ஜி.வி.செல்வம், டீகின் பல்கலை இணை டீன் பாஸ்கரன் ஆகியோர் ஒப்பந்த ஆவணத்தை பரிமாறி கொண்டனர். உடன் வி.ஐ.டி., நிர்வாகிகள்.