உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவுநீரை சுத்திகரித்து மறு பயன்பாடு: மதுரை, கோவை உள்ளிட்ட 6 நகரங்களில் ஆய்வு

கழிவுநீரை சுத்திகரித்து மறு பயன்பாடு: மதுரை, கோவை உள்ளிட்ட 6 நகரங்களில் ஆய்வு

சென்னை : 'பாதாள சாக்கடை திட்டம் வாயிலாக சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, மறுபடியும் பயன்படுத்துவது குறித்து, ஆறு நகரங்களில் ஆய்வு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துஉள்ளது.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், பாதாள சாக்கடை திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இத்திட்டத்தில் சேகரிக்கப்படும் கழிவு நீர், அந்தந்த பகுதியில் சுத்திகரிக்கப்படுகிறது. இதற்காக பகுதி வாரியாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.

நீர்வளம்

இந்நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர், ஆறுகள், கால்வாய்கள் வாயிலாக வெளியேற்றப்படுவது வழக்கம். நிலத்தடி நீர்வளம் குறைந்து வரும் நிலையில், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை, மறுபடியும் பயன்படுத்துவது அவசியம் என, பல்வேறு நிலைகளில் வலியுறுத்தப்படுகிறது. பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களில், கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, கழிப்பறைகளுக்கும், செடிகள் வளர்ப்பு போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

துவக்கம்

சென்னையில் கழிவு நீரை சுத்திகரித்த பின், மீண்டும் அதை, 'ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' முறையில் கூடுதலாக வடிகட்டி, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. குறிப்பிட்ட சில தொழிற்பேட்டைகளில் உள்ள ஆலைகளுக்கு, சென்னை குடிநீர் வடிகால் வாரியம், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை வழங்கி வருகிறது.இதை முன்மாதிரியாக வைத்து, பிற நகரங்களில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை, மறுபடியும் பயன்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளை, நகராட்சி நிர்வாகத்துறை துவக்கி உள்ளது.

தொழில்நுட்பம்

இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதாள சாக்கடை திட்டம் வாயிலாக சேகரிக்கப்படும் கழிவு நீரை சுத்திகரிக்க, பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. குறிப்பாக, டி.டி.ஆர்.ஓ., எனப்படும், 'டிர்டியரி டிரீட்மென்ட் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்' முறையில் கழிவு நீரை சுத்திகரித்தால், அது முற்றிலுமாக புதியது போன்றாகி விடும்.சென்னையில் தற்போது, இந்த முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீர், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், தமிழகம் முழுதும் அனைத்து நகரங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த, 'தமிழக நீர் முதலீட்டு நிறுவனம்' நடவடிக்கை எடுத்து வருகிறது.முதல் கட்டமாக, கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, திருச்சி மாநகராட்சிகள், திண்டிவனம் நகராட்சி என ஆறு நகரங்களில், கழிவு நீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான கலந்தாலோசகர் நிறுவனங்களை தேர்வு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் முதலீட்டில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajam
மார் 03, 2025 22:48

முதல்ல நல்ல நீர்நிலைகளை அழியாமல் காப்பாற்றுங்கள்.


Barakat Ali
மார் 03, 2025 08:31

ஒரு முன்னேறிய மாநிலம் இதை முன்பே செய்திருக்க வேண்டும் .....


Subburamu Krishnasamy
மார் 03, 2025 08:01

First of all, let them concentrate to purify Coovam, Adyar and other water bodies in the capital


Kasimani Baskaran
மார் 03, 2025 07:31

திடக்கழிவுகளையும் பொறுப்பாக கையாண்டால் நல்லது. கூடுதலாக பொது மக்களுக்கும் பயிற்சி கொடுத்து குப்பைகள் அதிகம் உருவாக்காமல் இருந்தால் நல்லது. ஆனால் ஊழல் செய்வதே முக்கியம் என்றால் விளங்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை