அணைகள், ஏரிகளுக்கு செல்ல வேண்டாம்: நீர்வளத்துறை தடை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு அருகில் செல்ல, நீர்வளத்துறை தடை விதித்துள்ளது. மாநிலம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள், 14,141 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சேலம், ஈரோடு, தேனி, மதுரை, திருவண்ணாமலை, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றும் பணிகளில், நீர்வளத்துறையினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். அணைகள் திறப்பையும், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதையும் பார்ப்பதற்காக, பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு செல்வது வழக்கம். இதனால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதுகாப்பு கருதி, நீர்நிலைகளுக்கு அருகே பொது மக்கள் செல்வதற்கு, நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள முக்கிய அணைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கு, 'ஷிப்ட்' அடிப்படையில், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.