சென்னை: ''பொதுமக்கள் விண் ணப்பித்தவுடன் நில அளவை செய்து கொடுக்கும் அளவுக்கு, 'சர்வேயர்'கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.சென்னை அண்ணா பல்கலையில், நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 1.47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை, அவர் நேற்று திறந்து வைத்தார்.நில அளவை பயிற்சி
பின், அமைச்சர் கூறியதாவது:மத்திய அரசின் தேசிய நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், 2023ல் அண்ணா பல்கலையின் நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு, 1.47 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.இதை பயன்படுத்தி கூடுதலாக, 50 பேர் பயிற்சி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள நில அளவை பயிற்சி மையத்தில், ஒரே சமயத்தில், 180 பேர் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளன.இதையடுத்து, அண்ணா பல்கலை மையத்தில், 50 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் உள்ளன. தற்போது, இங்கு கூடுதலாக, 50 பேர் பயிற்சி பெறலாம்.அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, கடந்த ஆண்டு, 1,000 பேர் சர்வேயர்களாக நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மேலும், 300 பேரை தேர்வு செய்யக்கோரி, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இந்த நியமனங்கள் முடிந்தவுடன், பொது மக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவை பணிகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும். சர்வேயர் வருகைக்காக நீண்ட காலம் காத்திருப்பது என்பது இனி இருக்காது. நில அளவை பணி விரைவாக முடிந்தால், பட்டா மாறுதல் பணிகளும் உடனுக்குடன் முடிந்து விடும்.புதிய வசதி
பட்டா மாறுதல் மேற்கொள்ளப்படும் போதே, நில அளவை வரைபடத்தையும் மக்கள் உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். விரைவில், இந்த புதிய வசதிகள் நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அமுதா, நில அளவை துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி, அண்ணா பல்கலை நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆர்.வித்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.