விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை: சமாளிக்கிறார் திருமா!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தவெக தலைவர் விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த காழ்ப்புணர்வும் இல்லை. எந்த வன்மமும் இல்லை. இது ஒரு நேர்ச்சி. தன் இயல்பாக கூட்டத்தின் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். யாருக்கும் இதில் கிரிமினல் நோக்கம் இல்லை. விஜய் அவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ, இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும். இதில் பலர் உயிரிழக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதில் உள்நோக்கம் இல்லை என்பது மக்கள் உணர்ந்து இருக்கும் உண்மை. இந்த சம்பவத்தில், சதி திட்டங்கள் இருக்கிறதா என்று புலனாய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி புலனாய்வில் என்ன வருகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதனை பொத்தம் பொதுவாக மேலோட்டமாக பார்த்தால் நெரிசல் சாவு. இதற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்காக அரசின் மீதோ, முதல்வர் மீதோ பழி சுமத்துவது ஏற்புடையதில்லை. தன்னுடைய கட்சியினர் தங்களை காண வந்த ஒரு சூழலில், காலதாமத்தாலும், ஒரே இடத்தில் அதிகமான மக்கள் கூடியிருந்ததாலும் ஏற்பட்ட விளைவு என்பதை விஜய் மற்றும் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்களை போன்றவரின் கருத்து. கரூரில் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளோம். இந்த சம்பவத்தில் பாஜவினர் தலையிட்டு மடைமாற்றம் செய்ய முயற்சி செய்வது, உள்நோக்கம் கற்பிக்க முயற்சிப்பது ஏற்புடையது அல்ல. விஜய் மீது ஏன் தமிழக அரசு வழக்குப்பதிவு செய்ய மெத்தனம் செய்கிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டி இருந்தது. பாஜவினர் விஜயை தங்களது கூட்டணிக்குள் இழுக்க முயற்சிக்கிறார்கள் என்று நான் கருதவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.