சைவ சமயத்தில் பிறந்த நாம் மதம் மாறி போய் விடக்கூடாது மதுரை ஆதீனம் பேச்சு
“சைவ சமயத்தில் பிறந்த நாம், மதம் மாறி போய் விடக்கூடாது. நம் மனதை மாற்றும் செயல்களை செய்வர்; அதில், நாம் கவனமாக இருப்பது அவசியம்,” என, மதுரை ஆதீனம் தெரிவித்தார்.சைவ சித்தாந்த மாநாட்டில், மதுரை ஆதீனம் 293வது குருமகா சந்நிதானம், ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது:பாரத நாட்டில் பிறப்பது புண்ணியம்; அதிலும், தமிழ்நாட்டில் பிறப்பது, அதை விட புண்ணியம். தற்போது, இளைஞர்களை சிவஞான போதத்தை துாக்க வைத்த பெருமை, தருமையாதீனத்தை சேரும். தருமை ஆதீனம் பேசுகையில், நிலம் கொடுத்தது குறித்து கூறினார். நிலம் உள்ளது; ஆனால், குத்தகை தருவதில்லை. குத்தகை என்றாலே, குத்த வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன; ஆனால், குத்தகை மட்டும் வருவதில்லை.பா.ஜ.,வினர் தேசபக்தி மிக்கவர்கள். எத்தனையோ பிரதமர், நம் நாட்டை ஆண்டுள்ளனர். ஆனால், ஒரே ஒரு பிரதமர் மட்டும் தான் ஆண்மை மிக்கவராக உள்ளார். தற்போது, உலகமே பிரதமர் மோடியை பாராட்டி வருகிறது. நம் கவர்னர் ரவி துணிச்சலாகச் செயல்பட்டு வருகிறார். 'கிரேட் மேன் தி கவர்னர்' என்று கூறத் தகுதியானவர்.சைவ சித்தாந்த சாஸ்திர நுால்கள், இறைவன் சிவபெருமானை எளிதில் அடைவதற்கான நெறிகளை காட்டுவதாகும். சிவனோடு தொடர்புடைய நுால்களை, புகழ் நுால்கள் என்பர். அவை பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. திருமுறைகளால் பெற முடியாதது, வேறு ஒரு முறையாலும் பெற முடியாது. இது, இறைவனது ஆணை. சைவ சமயமே உண்மை சிவம், உண்மை சமயம். இது முற்போக்கு சிந்தனை உடையது. வெறும் நம்பிக்கை மேலில்லாது, அறிவியல் சார்ந்து கருத்துகளை புலப்படுத்தி இருப்பது. பிற எல்லா சமயங்களையும், கொள்கைகளையும் தன்பால் ஈர்த்து, சமயம் கடந்த சமரச ஒருமைப்பாட்டை கொண்டு மகிழும் நோக்கம் கொண்டது. சைவ சமயம் என்பது வெறும் கோட்பாடு அன்று; அது வாழ்க்கை நெறி.சைவம், சித்தம், சந்தம் என்பதில், சைவம் சிவனோடு தொடர்புடையது; சித்தம் முடிவான உண்மை; அந்தம் முடிந்த முடிவு. சிவ ஆகமங்களின் முடிந்த முடிவே, சைவசித்தாந்தம். சிவத்துக்கும், உலகிற்கும் உள்ள தொடர்பு சைவம். உயிர்களுக்கும், உலகிற்கும் உண்டாகும் தொடர்பு சிவத்தால் ஆனது. அதனால், அத்தொடர்பும் சைவமே. இம்மூவகை தொடர்புகளையும் ஓதி, மக்களை வாழ வைப்பது சைவ சித்தாந்தம். சைவ சமயத்தில் பிறந்த நாம், மதம் மாறி போய் விடக்கூடாது. நம் மனதை மாற்றும் செயல்களை செய்வர், அதில், நாம் கவனமாக இருப்பது அவசியம்.சைவ சமயத்தவர்கள், சைவ நெறிகளை கடைப்பிடிக்க வேண்டும். தற்போது, பெண்கள் குங்குமம் வைப்பது குறைந்து வருகிறது. மாறாக, 'ஸ்டிக்கர்' பொட்டு வைத்துக் கொள்கின்றனர். இதை தவிர்த்து, நம் நெறிகளை ஏற்று நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.