உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரம்ப் தடாலடியை தாண்டி ஜெயிப்போம்; பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

டிரம்ப் தடாலடியை தாண்டி ஜெயிப்போம்; பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: அமெரிக்காவின் இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, மாற்று வழிகளில், ஏற்றுமதி வர்த்தக இழப்பை ஈடுகட்ட, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தயாராகி வருகின்றனர்.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச்செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது: திருப்பூர், ஆண்டுக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை ரகங்களை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. இதில், 50 சதவீதம் அதாவது, 22 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம், அமெரிக்க சந்தையை சார்ந்துள்ளது. எனினும், குறைந்த விலை ஆடை ரகங்களே, அதிகளவில் திருப்பூரில் இருந்து அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதியாகிறது.டிரம்ப்பின் 50 சதவீத வரி விதிப்பால், அமெரிக்க வர்த்தகர்கள், நம் நாட்டுக்கு வழங்கிவந்த ஆர்டர்களை, வரி குறைந்த வேறு நாடுகளுக்கு கொடுப்பார்கள். இதனால் நமக்கு இழப்பு ஏற்படத்தான் செய்யும். இந்தியா மீது டிரம்ப் தொடுத்துள்ள வர்த்தகப்போர் அடுத்தடுத்த வாரங்களில், முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்; ஒருவேளை அப்படி நடக்காமல், 50 சதவீத வரி விதிப்பு நீடித்தால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறை சில இன்னல்களை சந்திக்க நேரிடும்.மாற்று வழிகள் உண்டு திருப்பூரில், 30 சதவீத ஏற்றுமதி நிறுவனங்கள், அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்துள்ளன. அவர்கள் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட வேறு எந்த வழிகளில் செல்லலாம் என்பதை தீவிரமாக ஆராய தொடங்கிவிட்டனர். பல நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையை அணுக வாய்ப்பு உள்ளது. இந்த தேடல்கள் தற்காலிகமாக பலன் தரலாம். அதேநேரம், எதிர்காலத்தில் ஐரோப்பிய சந்தையில் வர்த்தக போட்டி கடுமையாகி, ஆடைகள் விலை வெகுவாக குறைவது போன்ற புது சிக்கல்கள் உருவாகக்கூடும்.இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனுடனும் விரைவில் இத்தகைய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு தெரிகிறது. பல விஷயங்களில் அமெரிக்காவை அப்படியே பின்பற்றி வந்த ஐரோப்பிய யூனியன் நாடுகள், டிரம்பின் சர்வதேச வர்த்தக போரால் மிரண்டு போயிருப்பதால், அவர்களும் மாற்று வழிகளை தேட ஆரம்பித்து விட்டார்கள். அது நமக்கு சாதகமாக மாற வாய்ப்பு உள்ளது.அதன் மூலம், திருப்பூர் உள்பட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. உடனடியாக இது சாத்தியமில்லை என்றாலும்கூட, ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு காலத்தில் புதிய சந்தை வாய்ப்புகளை வசப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை பெரும்பாலான வர்த்தகர்களுக்கு இருக்கிறது.உடனடி சிக்கல் என்ன? இப்போதைய சூழலில், ஏற்றுமதி நிறுவனங்கள், வங்கி கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்; வங்கிகளில் செய்துள்ள 'பார்வேர்டு கான்ட்ராக்ட்'களை முடிக்க முடியாமல், அபராதம் செலுத்த வேண்டியது போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதிக ஆர்டர்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், அதிக தொகை செலவழித்து, புதிய கட்டமைப்பு, தொழில்நுட்ப மேம்பாடு செய்துள்ள நிறுவனங்களின் பொருளாதாரம் சற்று அதிகமாகவே பாதிக்கும்.என்னதான் இன்னல்கள் வந்தாலும், தேச நலன் என்று வரும்போது எந்த துறையில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும். அந்தவகையில், ஏற்றுமதி வர்த்தகர்களான நாங்களும் ஒட்டுமொத்த இந்திய மக்களுடன் சேர்ந்து, அரசுக்கு ஆதரவாக நிற்கிறோம். நாட்டின் இறையாண்மையை எவருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்று மத்திய அரசு உறுதியாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.அதே சமயம், இக்கட்டான இந்த சூழலிலிருந்து தொழில் துறையினரை மீட்பதற்கான வழிகளையும் அவசர முக்கியத்துவம் அளித்து கண்டறிந்து செயல்படுத்தவேண்டும். நமது அரசு வழங்கும் வரி சலுகைகள் காரணமாக, வங்கதேசத்திலிருந்து 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான ஆடை ரகங்கள் நம் நாட்டில் இறக்குமதி ஆகின்றன. அந்த சலுகைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும். உள்நாட்டுச் சந்தை வாய்ப்புகள் முழுமையாக இந்திய ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு கிடைக்கச்செய்து, நமது தொழிலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். இவ்வாறு, குமார் துரைசாமி கூறினார்.டி.கிருஷ்ண பிரபு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

m.arunachalam
ஆக 08, 2025 13:30

இதில் முதல் பாதிப்பு தொழிலாளர்களுக்கு வரும். வறுமை உருவாக்கப்படுகிறது. சமாளிக்க முடியும். சில பழக்கங்களை மாற்றினால் போதும்.


vee srikanth
ஆக 08, 2025 12:26

அமெரிக்காவின் துக்லக் வரி என்ற பெயரில், அமெரிக்க மக்களை தான் வதைக்கிரான்


K V Ramadoss
ஆக 08, 2025 12:19

இந்திய மக்கள் இந்த நெருக்கடி காலத்தில் எப்படி உங்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்லுங்கள்.. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துணிகள், ஆடைகளையே வாங்கவேண்டும், என்றால் அதை பிரபலப்படுத்தலாம். மக்கள் ஒத்துழைப்பார்கள். நாங்கள் ரெடி..


Sundar R
ஆக 08, 2025 10:24

Because of MAKE IN INDIA, Bharat is depending on any country in the world. USA is depending more on Indian products and Human Resources. In such a scenario, USA is treating Bharat like a sub-ordinate or junior partner and has slapped 50% tax tariff.


c.k.sundar rao
ஆக 08, 2025 08:59

Appreciate the confidence of APPAREL EXPORTS manufacture's.


Jack
ஆக 08, 2025 08:33

டாஸ்மாக் சரக்கை தமிழ்நாட்டை தாண்டி வேறெந்த மாநிலங்களிலும் விற்பனை செய்ய முடியவில்லை ..திருப்பூரில் வடநாட்டு முதலாளிகளும் தொழிலாளர்களும் தான் அமெரிக்க மால்களில் தமிழக டெக்ஸ் டைல் துணிகளை விற்பனை செய்யும் அளவுக்கு தரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை