உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முடிவுக்கு வந்தது காற்று திசை மாற்றம்: அதிகாலை மழைக்கு அதிக வாய்ப்பு

முடிவுக்கு வந்தது காற்று திசை மாற்றம்: அதிகாலை மழைக்கு அதிக வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று திசை மாற்றத்தால் ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வரும் நிலையில், வட மாவட்டங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது.மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், அங்கு கனமழை பெய்தது. இதனால், தென்மேற்கு பருவக்காற்று திசை மாறி, தமிழகம் நோக்கி வர வேண்டிய ஈரக்காற்று தடைபட்டதால், கடந்த சில நாட்களாக காலை நேரத்தில், அக்னி நட்சத்திரம் போல வெயில் வாட்டியது. தற்போது, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையை கொடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இதனால், தென்மேற்கு பருவக்காற்று மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 25 வரை இந்த நிலைமை நீடிக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பகல் நேரத்தில், இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும். வெப்பநிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பால் வெயிலில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால், காலை நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சூழல் காணப்பட்டது.அடுத்த இரு நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாலை மழை

தன்னார்வ வானிலை ஆர்வலரான, 'தமிழக வெதர்மேன்' வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:வெயில் வாட்டி எடுப்பது குறைந்து, வட மாவட்டங்களில் மழை துவங்கியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த நிலை தொடரலாம்.இரவு, அதிகாலை நேரங்களில் மிதமான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், மதுரை உள்ளிட்ட சில பகுதிகள் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கத்தை சந்திக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, ஆறு நகரங்களில் வெயில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது. அதிகபட்சமாக, மதுரை நகரம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில், 103 டிகிரி பாரன்ஹீட்; அதாவது, 39.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.ஈரோடு, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, தஞ்சை, திருச்சி நகரங்களில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேலாக வெப்பம் பதிவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy Sekar
செப் 20, 2024 08:35

இந்த செய்தி சென்னை மக்களுக்கானதுதான். உஷாராக இருங்க..துணி பாத்திரப்பண்டங்கள் எல்லாம் கட்டிவெச்சு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுபோயிடுங்க.. புளிசோறு தயிர் சோறு கொடுத்துவிட்டு செய்தியில் புகைப்படத்தோடு வருவதற்கு விளம்பரம் தேட இந்த ஆட்சியாளர்கள் வருவார்கள். அதனால இப்பவே உஷாரா இருந்துக்கோங்க.. மழை நீரில் தத்தளிக்கும் சென்னையை மீண்டும் பார்க்க ஒரு வாய்ப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை