வடகிழக்கு பருவமழை 36 நாளில் 17% அதிகம்
சென்னை: இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலத்தில், இயல்பை விட 17 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அந்த மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, அக்., 15ல் துவங்கியது. ஆனால், நிர்வாக கணக்கீடு அடிப்படையில், அக்., 1 முதல் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழை கணக்கில் சேர்த்து கொள்ளப்படும். இந்த வகையில், அக்., 1 முதல் நேற்று வரையிலான 36 நாட்களில், இயல்பான கணக்கின்படி, 21 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும்; ஆனால், 24 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட 17 சதவீதம் அதிகம்.மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேலேயும், மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோன்று, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலைமை, 11ம் தேதி வரை நீடிக்கலாம்.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.