துாய்மை பணியாளர்களுக்கு சம்பளத்துடன் வார விடுப்பு
சென்னை:“அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்,” என, தேசிய துாய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் அறிவுறுத்தினார்.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்களின் குறை கேட்பு கூட்டம், தேசிய துாய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில், மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பணியாளர்கள் பலர், தங்களை பணியமர்த்திய தனியார் நிறுவனத்தின் மீது, குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதற்கு உரிய தீர்வு காணும்படி, அதிகாரிகளுக்கு வெங்கடேசன்அறிவுறுத்தினார்.பின், அவர் கூறியதாவது:துாய்மை பணியாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., தொழிலாளர் காப்பீடு திட்டம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், பணி நேரத்தை தாண்டி பணியாற்றுவோருக்கு, அலவன்ஸ் வழங்காமல், மற்றொரு நாளுக்கான பணி நேரமாக கணக்கிட்டு சம்பளம் வழங்கப்படுகிறது.கூடுதல் பணியில் ஈடுபட்டால், அவர்களுக்கு 5 சதவீதம், 'ஓவர் டைம் அலவன்ஸ்' வழங்க வேண்டும். அதை அந்நிறுவனம் பின்பற்றவில்லை. பணியாளர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு, 10 நாட்களில் தீர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.துாய்மை பணியாளர்களுக்கு, வாரம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.ஆனால், அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும்,துாய்மை பணியாளர்களுக்கு அவ்வாறுவழங்கவில்லை.அவர்கள் விடுப்பு எடுத்தால், அன்றைய ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே, அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும், மாதத்தில் நான்கு நாட்கள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வலியுறுத்தி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.