உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 41 பேர் உயிரிழக்க காரணம் என்ன? நடந்தது இது தான் என்கிறார் முதல்வர்!

41 பேர் உயிரிழக்க காரணம் என்ன? நடந்தது இது தான் என்கிறார் முதல்வர்!

சென்னை:''கரூர் பிரசார கூட்டத்திற்கு, த.வெ.க., தலைவர் விஜய் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது, கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார். சட்டசபையில் அவர் பேசியதாவது: கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ம் தேதி, தமிழக வெற்றிக் கழக தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக த.வெ.க., தரப்பில் கொடுக்கப்பட்ட மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, அதிகாரிகள் மற்றும் காவலர்கள் என 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடிநீர் இல்லை

நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்ததை விட, அதிகமாக கூட்டம் வரும் என எதிர்பார்த்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்டம் நடத்த மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அனுமதி கேட்டிருந்தனர். பகல் 12:00 மணிக்கு த.வெ.க., தலைவர் கரூர் வருவதாக, அக்கட்சி பொதுச்செயலர் பேட்டி அளித்தார். இதனால், கரூரில் காலை முதலே, குறிப்பிட்ட இடத்துக்கு மக்கள் வரத் துவங்கி விட்டனர். கட்சியின் தலைவர், சென்னையில் இருந்து காலை 8:40 மணிக்கு புறப்பட்டு, 9:25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். நாமக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், கரூருக்கு இரவு 7:00 மணிக்கு வந்துள்ளார். அறிவிக்கப்பட்டதை தாண்டி ஏழு மணி நேரம் கழித்து தான் வந்துள்ளார். இந்த தாமதமே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கரூரில் அவை செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் வழங்கவில்லை; உணவு வழங்க எவ்விதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க, பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. சம்பவம் நடந்த அதே இடத்தில், இரண்டு நாட்களுக்கு முன், எதிர்க்கட்சி தலைவர் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சி நடந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அந்த கூட்டம் முடிந்தது. அதற்கு நேர்மாறாக த.வெ.க., நிகழ்ச்சி நடந்துள்ளது. கரூர் மாவட்ட எல்லையில் உள்ள தவிட்டுபாளையம் சோதனைச் சாவடியில், பிரசார வாகனத்தில் இருந்தவர்களை, ஏற்பாட்டாளர்கள் தொடர்பு கொண்டனர். அக் ஷயா மருத்துவமனை அருகே தலைவரை பேசுமாறு கூறியுள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடத்தில் தான் பேசுவோம் என, வாகனத்தில் முன்னேறி சென்றுள்ளனர். மயக்கம் வழிமுறைகளை மீறி வாகனம் சென்றதால், இருபுறம் இருந்த கூட்டத்தை, அது நிலைகுலைய செய்தது. இதனால், கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைக ள் மத்தியில் பீதி, மூச்சு திணறல், மயக்கம், நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டனர். கூட்டத்தின் ஒரு பகுதியினர், 'ஜெனரேட்டர்' பகுதிக்குள் நுழைந்து, தகர கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சித்துள்ளனர். இதனால் மின்சாரம் வருவதை தடுக்க, 'ஜெனரேட்டர் ஆப்பரேட்டர்' மின்சாரத்தை துண்டித்திருக்கிறார். கூட்ட நெரிசலில் காயம் மற்றும் சோர்வால் மயக்கமடைந்த மக்கள் உதவி கோருவதை கவனித்து, காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து உள்ளனர். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்தது. நெரிசல் ஏற்படுவதற்கு முன், எந்த ஆம்புலன்சும் வரவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தபோது, த.வெ.க.,வினர் இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கி வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் மீட்புப் பணிகள் தடைப்பட்டன. இந்த சம்பவத்தில் மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த உடனே, தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேல்முறையீடு இந்த சம்பவத்தை தமிழக அரசு சட்டப்படி விரைந்து கையாண்டது. கரூர் சம்பவம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என் 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில், எத்தனையோ நிகழ்ச்சிகளை பார்த்து இருக்கிறேன்; நடத்தியும் இருக்கிறேன். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் சட்ட திட்டங்கள், பொது ஒழுக்கத்திற்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள் தான்; நம் தமிழக மக்கள் தான். இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ