அப்படி என்ன வன்மம்: அமைச்சரிடம் கேட்கிறது பா.ஜ.,
சென்னை:'வட மாநிலத்தவர்கள் மீது, உங்களுக்கு அப்படி என்ன வன்மம்' என, அமைச்சர் சுப்பிரமணியனுக்கு தமிழக பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.தமிழக பா.ஜ., அறிக்கை:தி.மு.க., ஆட்சியில் தரம் கெட்டுள்ள சட்டம் - ஒழுங்கின் உச்சமாக, சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த ஒரு டாக்டரை, அவரது அறைக்குள் சென்று, வாலிபர் கத்தியால் குத்திய சம்பவத்தால், தமிழகமே அச்சத்தில் உறைந்துள்ளது.ஆனால், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அங்கு என்ன நடந்தது என்பது குறித்து சரியான அடிப்படை தகவலை ஆராயாமல், 'டாக்டரை தாக்கியது வட மாநிலத்தவர்கள்' என்ற பொய் வதந்தியை அவசரமாக பரப்பியது ஏன்?மக்களிடையே இன வன்முறையை துாண்டி, அரசின் நிர்வாக கோளாறுகளை மூடி மறைப்பதற்காகவா?மக்களிடையே பொய் செய்திகளை பரப்பிய அமைச்சருக்கு எதிராக மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்த பின், தாக்குதல் நடத்திய நபர் வட மாநிலத்தவர் இல்லை என்பதை மட்டும் ஒப்பு கொண்டீர்கள். சாட்சியமின்றி அவப்பழி சுமத்தியதற்கு, ஏன் மன்னிப்பு கேட்கவில்லை?கொடுக்கப்பட்ட பதவிக்கான பொறுப்பு சிறிதுமின்றி, முன்னுக்கு பின் முரணாக, பொய் தகவல்களை பரப்புவது தான், ஒரு அமைச்சருக்கான மாண்பா; வட மாநிலத்தவர்கள் மீது அமைச்சருக்கு அப்படி என்ன வன்மம்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.