மதுவிலக்கு போலீஸ் என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி
சென்னை:'கள்ளக்குறிச்சியில் இத்தனை ஆண்டுகள் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது என்றால், அதை தடுக்க வேண்டிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் பலியாகினர். கடந்த ஜூன் 19ல் இந்தச் சம்பவம் நடந்தது. கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., - டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையத்தை, தமிழக அரசு நியமித்தது.கள்ளச்சாராய மரணச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, அ.தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ., மற்றும் தே.மு.தி.க., சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி, நவ., 20ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து விட்டது.இதற்கிடையில், கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் பலியான வழக்கில் கைதானவர்களில், 15க்கும் மேற்பட்டோர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர்களின் உறவினர்கள் தரப்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''இந்த வழக்குகள் அனைத்திலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இறுதி விசாரணைக்காக, வழக்கை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'எதன் அடிப்படையில், அனைவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்?' என, கேள்வி எழுப்பினர்.இதற்கு, 'இவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளனர். அதை குடித்ததில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தால், மாவட்டம் முழுதும் ஒருவித பதற்ற நிலை உருவாகியுள்ளது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.'இத்தனை ஆண்டுகள் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது என்றால், அதை தடுக்க வேண்டிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு என்ன செய்து கொண்டிருந்தது?' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றனர்.வரும் ஜனவரி 6ம் தேதிக்கு இறுதி விசாரணைக்காக, வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.