|  ADDED : மே 20, 2025 07:24 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
மதுரை : 'தேசிய ஊரக வேலைத்திட்டத்திற்கென தனிகட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆப் வசதி, ஊழியர்களுக்கு பயிற்சி இல்லாததே முறைகேடுகளுக்கு காரணம்' என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இத்துறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 2006 முதல் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 385 ஒன்றியங்கள், அவற்றில் 12 ஆயிரத்து 500 ஊராட்சிகள் உள்ளன. இங்கு ரூ.பல ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடக்கின்றன. கட்டமைப்பு குறைபாட்டால் கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு பணிகளில் முறைகேடு நடக்கிறது.இத்திட்டத்தில் பணியாற்றுவோரை காலை, மாலை வருகையை செயலி மூலம் பதிவேற்றம் செய்கின்றனர். ஒரு கிராமத்தில் 2 பணிகள் வீதம் 7 அல்லது 8 கிராமங்களில் நடக்கும் பணிகளை ஒன்றிய மேற்பார்வையாளர், இன்ஜினியர், ஏ.பி.டி.ஓ., கண்காணிக்க வேண்டும். அவர்கள் உடனுக்குடன் செயலியில் கண்காணிக்கும் வசதி கிடையாது. நேரில் சென்று பார்வையிட்டபின், மாலையில் பணிகள் முடிந்தபின்பே கம்ப்யூட்டரில் கண்காணிக்க வேண்டியுள்ளது. இதற்கான பயிற்சி ஊழியர்களுக்கு அளிக்கப்படாததால் பயிற்சி பணிகளின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மதுரை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: தேசிய ஊரக பணிகள் திட்ட  அலுவலர்கள், ஊழியர்களுக்கு போதிய பயிற்சி வழங்க வேண்டும். பணிகளை கவனிக்க ஒன்றிய அளவில் ஒரு பி.டி.ஓ., 2 ஏ.பி.டி.ஓ.,க்கள், 2 உதவியாளர்கள் என தனிகட்டமைப்பு வசதி வேண்டும். செயலியை 'அப்டேட்' செய்யவேண்டும். இதை 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். விரைவில் ஊரக வளர்ச்சித்துறை கமிஷனரை சந்திக்க உள்ளோம் என்றார்.