ராமதாஸ் என்ன காட்சிப்பொருளா? யார், யாரோ வந்து பார்க்கின்றனர் அன்புமணி ஆவேசம்
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு ஏதாவது நடந்தால், சும்மா இருக்க மாட்டேன்; தொலைத்து விடுவேன்,” என, பா.மக., தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்தார். சென்னை பனையூரில் ந டந்த கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், அன்புமணி பேசியதாவது: எவ்வளவோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறேன். தினமும் காலை முதல், இரவு துாங்கும் வரை, அவ்வளவு வலி மனதில் உள்ளது. ஆனாலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன் சிரித்துக் கொண்டிருக்கிறேன். என் வேலையை பார்த்துக்கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க முடியும். மனதும், உடலும் நன்றாக இருக்கும். ஆனால், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவே நான் வந்திருக்கிறேன். நம்மிடம் இருந்து வெளியே சென்றவர்களை ஒழிந்தனர் என நினைக்கக்கூடாது. அவர்களும் கட்சிக்காக உழைத்தவர்கள் தான். அவர்களையும் நம் பக்கம் கொண்டு வர வேண்டும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஏற்கனவே திட்டமிட்ட பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றார்; நலமாக இருக்கிறார். ஆனால் அருகில் இருக்கும் சிலர், 'ராமதாசுக்கு உடல்நிலை சரியில்லை, வந்து பாருங்கள்' என, அழைத்து அவரை பார்க்க வைத்திருக்கின்றனர். யார் யாரோ வந்து ராமதாசை பார்த்திருக்கின்றனர். அவர் என்ன கண்காட்சிப் பொருளா? இது அசிங்கமாக இருக்கிறது. அரசியல் தலைவர்களெல்லாம் ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்றே புரியவில்லை. ராமதாசை, அருகில் இருப்போர் எப்போதும் துாங்கக்கூட விடுவதில்லை. கழிப்பறையில் இருந்தால்கூட, போன் கொடுத்து பேச வைக்கின்றனர். ராமதாசை வைத்து நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ராமதாசுக்கு ஏதாவது நடந்தால், சும்மா இருக்க மாட்டேன்; தொலைத்து விடுவேன். நடைபயணத்தின்போது, ஒவ்வொரு ஊரிலும் கோவிலுக்குச் சென்றேன். எனக்கு கண் திறந்தது போல உள்ளது. பிரமாண்ட மான கோவில்கள், சிற்பங்கள், பாரம்பரியம், என்னை பிரமிக்க வைத்தன. இவ்வாறு அவர் பேசினார். கணேஷ்குமாருக்கு பா.ம.க.,வில் பதவி பா.ம.க., இளைஞரணி தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார் நியமிக்கப்படுதாக அன்புமணி மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் அறிவித்தார். மேலும், பா.ம.க., மாவட்டச் செயலர்கள், வரும் 31க்குள் உறுப்பினர் சேர்க்கைக்கான இறுதி பட்டியலை தந்தால் மட்டுமே, டிச., 17ல் சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் எனவும், செயல்படாத நிர்வாகிகள், நவ., 1-க்கு பின் நீக்கப்படுவர் எனவும் அன்புமணி கூறினார்.