| ADDED : மார் 24, 2025 06:21 AM
அரூர் : “தமிழகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு, கொலை குற்றங்கள் குறைவு என, முதல்வர் ஸ்டாலின் கூறுவது, அட்ராசிட்டியின் உச்சம்,” என, முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எச்.அக்ரஹாரத்தில், அ.தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்றவர் அளித்த பேட்டி: 'டாஸ்மாக்கில் கணக்கில் வராமல், நேரிடையாக வரி கட்டாத பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சட்டசபையில் பேசினார். முன்பு நிதியமைச்சராக இருந்த தியாகராஜன், 'டாஸ்மாக்கில், 20,000 கோடி ஊழல் நடக்கிறது, அது எங்கு போகிறது என தெரியவில்லை' என பேசினார். தற்போது டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது என அமலாக்கத் துறை அறிக்கையில் கூறியுள்ளது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்தெல்லாம் சட்டசபையில் அ.தி.மு.க., ஆணித்தரமாக எடுத்து வைத்து பேசிய நிலையில், 'கடந்தாண்டை விட, இந்தாண்டு கொலை குற்றங்கள் குறைவு' என, முதல்வர் பதில் கூறுகிறார். இது அட்ராசிட்டியின் உச்சம். இவ்வாறு அவர் கூறினார்.