உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் மற்ற துறைகள் திறப்பு எப்போது : தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் மற்ற துறைகள் திறப்பு எப்போது : தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கேள்வி

சென்னை: நாளை திறக்கப்பட உள்ள வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ள நிலையில் மற்ற துறைகள் திறக்கப்படுமா என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியுள்ளார்.இ.பி.எஸ்., அறிக்கை:பலநூறு கோடி செலவுகளில் கமிஷன் ஒன்றை மட்டுமே குறியாகக்கொண்டு பிரம்மாண்ட கட்டடங்களைக் கட்டுவது மட்டுமே சுகாதாரத் துறையின் முன்னேற்றம் என்று இந்த தி.மு.க., அரசுநினைத்துக்கொண்டு, 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை நாளை (25ம் தேதி) முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை திறக்கப்பட உள்ள வேலூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையில், மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மருத்துவமனையில் செயல்பட உள்ள மகப்பேறு துறை மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் தேவைப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும், வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து அயற்பணியில் மாற்றப்பட உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு துறையில் 31 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 8 பேர் மட்டுமே பணியாற்றும் நிலையில், இவர்கள் எப்படி இரண்டு இடங்களிலும் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்ற முடியும் என்பது தெரியவில்லை.'இந்தத் துறையை நிர்வகிக்கும் அமைச்சர் சுப்பிரமணியன், வாய்ப் பந்தல் போட்டு இந்த உண்மையை மறைத்துவிடலாம் என்று கருதுவது வேடிக்கையாக உள்ளது. இதற்கெல்லாம் 2026 தேர்தல் கண்டிப்பாக மாறுதலைத் தரும்.இவ்வாறு இ.பி.எஸ்., அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 24, 2025 20:31

சார், அந்த சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் கேன்டீன் துறை திறந்துட்டாங்க சார்.


ஆரூர் ரங்
ஜூன் 24, 2025 19:10

ஒரே ஊரில் பல பெரிய மருத்துவமனைகளைக் கட்டுவதற்கு பதில் குப்பை சாக்கடை போன்ற அடிப்படை சுகாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தலாம். நோய் உற்பத்தியைத் தடுத்தால் போதும்.


சமீபத்திய செய்தி