அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் உள் ஒதுக்கீடு எப்போது?
சென்னை:உயர் கல்வியில், 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க., அரசு, இதுவரை அதை நிறைவேற்றாததால், அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், உயர் கல்வியில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் சேரும் வகையில், அவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவ்வாறு சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்கு வரத்து கட்டணம் உள்ளிட்ட செலவுகளையும், அரசே ஏற்கிறது. அதிருப்தி கடந்த நான்காண்டுகளில் தொழில் படிப்புகளில், 35,530; மருத்துவம் சார்ந்த படிப்புகளில், 2,382; வேளாண் படிப்பு களில், 1,369; கால்நடை, மீன்வளம் சார்ந்த படிப்புகளில், 261; சட்டப் படிப்பு களில், 626 மாணவ -- மாண வியர் என, மொத்தம் 40,168 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களுக்காக, அரசு, 1,165 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளது . அதேசமயம், 'அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால், அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பின், இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார். ஆனால், கடந்த நான்காண்டுகளாக இதுகுறித்த எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடாததால், அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, அரசு உதவி பெறும் பள்ளி உரிமை மீட்புக் குழுவினர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதி அளித்ததுபோல், உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கப்படும். உயர் கல்வியில், 7.5 சதவீதமாக உள்ள இடஒதுக்கீடு, 10 சதவீதமாக உயர்த்தப்படும். ஏமாற்றம் அதிலிருந்து, 2.5 சத வீதம் உள் ஒதுக்கீடாக, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. இது தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது, தேர்தல் அறிக்கையிலேயே தங்கி விட்டது ஏமாற்றம் அளிக்கிறது. உள் ஒதுக்கீடுக்கான சட்டம் இயற்றப்பட்டிருந்தால், உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், 150 பேர் என, நான்காண்டுகளில், 600 பேர் மருத்துவ படிப்பிலும், மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளிலும் சேர்ந்திருப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.