சார்ஜிங் நிலையம் எங்கிருக்கிறது? அறிந்து கொள்ள உதவி மையம்
சென்னை:மின் வாகனங்களுக்கு எங்கெங்கு சார்ஜிங் மையங்கள் உள்ளன என தெரிந்து கொள்வதற்கு உதவி மையத்தை, மின் வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம் அமைத்துஉள்ளது.தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கவும், எரிபொருள் செலவை குறைக்கவும், பலரும் இ.வி., எனப்படும் மின்சார ஸ்கூட்டர், கார்களை வாங்கி வருகின்றனர். இந்த வாகனங்களுக்கு தடையின்றி சார்ஜிங் வசதி கிடைக்க நெடுஞ்சாலை, முக்கிய சந்திப்புகள், வணிக வளாகம் போன்றவற்றில் தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், சார்ஜிங் மையம் எங்குள்ளது என பலரும் அறியாத நிலை உள்ளது. எனவே, சார்ஜிங் மையம் குறித்த விபரங்களை தொழில்முனைவோர், வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள உதவி மையத்தை, பசுமை எரிசக்தி கழகம் அமைத்துள்ளது. இது, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படுகிறது.இந்த மையத்தை, 89258 72398 மொபைல் போன் எண்ணில் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், 'ev.tnebnet.org' மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் அனுப்பலாம். இவற்றின் வாயிலாக, சார்ஜிங் மையம் அமைக்க தொடர்பு கொள்ள வேண்டிய விபரம், தமிழகத்தில் எங்கெங்கு சார்ஜிங் மையம் உள்ளது, என்னென்ன வகை சார்ஜிங் மையங்கள் உள்ளன, சார்ஜிங் செய்வதற்கான கட்டணம் எவ்வளவு என, அறிந்து கொள்ளலாம்.