உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கற்பிக்காத பாடங்களுக்கு உயர்கல்வி இன்சென்டிவ் வழங்கப்பட்டதா

கற்பிக்காத பாடங்களுக்கு உயர்கல்வி இன்சென்டிவ் வழங்கப்பட்டதா

மதுரை : மாநில அளவில் தொடக்க கல்வியில் பொருளியல் வணிகவியல் படிப்புக்கு உயர்கல்வி ஊக்கத் தொகை (இன்சென்டிவ்) பெற்ற ஆசிரியர்களுக்கு அத்தொகையை நிறுத்தியும், இதுவரை பெற்றதை திரும்ப வசூலிக்கவும் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தொடக்க கல்வியில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அதற்கான கல்வித் தகுதியுடன் கூடுதல் கல்வித் தகுதியை ஏற்படுத்திக்கொள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற கூடுதல் பட்டம் பெற்று உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறுகின்றனர். பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் வணிகவியல், பொருளியல் பட்டத்திற்காக ஆசிரியர்கள் பெற்ற ஊக்கத் தொகை, பதவி உயர்வு வழங்க இயலாது என கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி மாநில அளவில் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அளித்து, கூடுதல் தொகையை திருப்பி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: அனைத்து வகை ஆசிரியர்களில் பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு ஊக்க ஊதியம் பெற்றது தவறு என கூறி ஊக்க ஊதியத்தை நிறுத்தவும், கூடுதல் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் மே 19ல் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.ஆனால் இந்த உத்தரவுக்கு மே 28ல் ஆசிரியர் ஒருவர் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளார். விசாரணையும் நிலுவையில் உள்ள போது மீண்டும் இயக்குநரால் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 369 இடைநிலை, 12 வட்டாரக் கல்வி அலுவலர் உட்பட 766 பேருக்கு கூடுதல் தொகையை நிலுவையுடன் செலுத்த செயல்முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தொடக்க கல்வியில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடங்களை கற்பிக்க அறிவியல் பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படும்போது இப்பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தை படித்தாலே அறிவியல் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்கின்றனர்.ஆனால் சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு, புவியியல், குடிமையியல், பொருளியல், வணிகவியல் எனப் பாடங்கள் இடம் பெற்றிருந்தாலும் வரலாறு படித்தவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்கின்றனர். இந்த முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அறிவியல் பாடம் போல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்தில் வணிகவியல், கணக்கு பதிவியல், பொருளாதாரம், வணிகச் சட்டங்கள், சந்தைப்படுத்துதல், மேலாண்மை, புள்ளியியல், மனிதவள மேலாண்மை என பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். 9ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்திலும் பொருளியல், வணிகவியல் பாடப் பிரிவு இடம்பெற்றுள்ளன.இதுபோன்ற சூழலில் வணிகவியல், பொருளியல் பாடத்தில் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வை மறுப்பது எவ்வகையில் நியாயம். இதுகுறித்து தொடக்க கல்வித்துறை ஆய்வு செய்து இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

GSR
ஜூன் 20, 2025 07:06

கல்லூரியில் சேரும் மாணவர்கள் அந்த அந்த பாடத்தின் அடிப்படை கருத்தாக்கங்களை ஆழ்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதன் காரணம் இப்பொழுது தெரிகிறது. அந்த அந்த பாடத்தை அந்த படிப்பு படித்தவர்கள் தான் நடத்த வேண்டும் என்ற தார்மீக கொள்கையே பின்பற்றப்பட வில்லை. இதன் விளைவு பல நர்சிங் கல்லூரிகளில் மனோதத்துவ பாடத்தை நர்சிங் படித்தவர்களே சொல்லி கொடுக்கின்றனர். இன்னும் ஒரு படி மேலே போய், மனோதத்துவ ஆலோசனையும் வழங்க விழைகின்றனர். இந்த லட்சணத்தில் தமிழ்நாடு தான் கல்வி தரத்தில் முதன்மை என முகநூலில் நிறைய அதிமேதாவிகள் தம்பட்டம் வேறு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை