உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கியது யார்? மேடை போட்டு விவாதிக்க வேலு விருப்பம்

அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கியது யார்? மேடை போட்டு விவாதிக்க வேலு விருப்பம்

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டத்தில், பல்வேறு பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:அரசு ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பல்வேறுவிதமான சலுகைகளை தி.மு.க., அரசு வழங்கி உள்ளது. அவர்கள் பாதுகாப்பாகவும் உள்ளனர். அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அவரது குடும்பத்துக்கு பணிக்கொடை கொடுக்கும் திட்டத்தை கருணாநிதி தான் கொண்டு வந்தார்.மத்திய அரசு எப்போது அகவிலைப்படி ஏற்றினாலும், உடனடியாக தமிழக அரசும், மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை ஏற்றுகிறது. அந்த நடைமுறையைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. ஆனால், தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். இப்படி பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் அரசு ஊழியர் யாரும், தி.மு.க., அரசை விமர்சிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும், தன் கட்சிக்காக அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார். அதனால், அரசு ஊழியர்கள் கவனத்தை, தன் கட்சி பக்கம் ஈர்க்க, அரசு மீது பழி போட்டு, அரசு ஊழியர்களை தி.மு.க., மீது கோபம் கொள்ள வைக்கப் பார்க்கிறார். ஆனால், அதெல்லாம் நடக்காது; காரணம், அவர்களுக்கு எது உண்மை என தெரியும். இதற்காக பொதுமக்கள் மத்தியில் மேடை அமைத்து, இரு தரப்பையும் விவாதிக்க வைக்கலாம். தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சி சார்பிலும், யார் அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகை கொடுத்தது என பேசுவோம். நிறை குறைகளை மக்கள் முடிவெடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி