உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றிகரமான தலைவர் யார்?

வெற்றிகரமான தலைவர் யார்?

வேலுார்: ''ஒரு கட்சியை நடத்துவது என்பது சாதாரணமானது அல்ல; கட்சியை நடத்தும் தலைவருக்கு, உடல் முழுக்க கண் இருக்க வேண்டும்; நிறைய சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும்,'' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி: கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை த.வெ.க., தலைவர் விஜய் சந்திக்காதது குறித்து, எனக்கு எந்த தனிப்பட்ட கருத்தும் கிடையாது. அனைத்து கட்சியினருக்கும், தங்கள் கட்சி சார்பில் ஒரு கூட்டம் போட்டால், அங்கு எவ்வளவு தொண்டர்கள் வருவர்; எவ்வளவு மக்கள் வருவர் என்ப தெல்லாம் நன்கு தெரியும். முறையான பாதுகாப்பு அதைச் சொல்லித்தான் போலீஸ் அனுமதி கேட்பர். அந்த அடிப்படையில் தான், கரூரிலும் த.வெ.க.,வினர் போலீஸ் அனுமதி பெற்றுள்ளனர். அதற்கேற்ப போலீஸ் பாதுகாப்பு முறையாக வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் பெருவாரியாக வரும் என்றால், மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் குறுகலான இடங்களில் கூட்டம் நடத்தக்கூடாது. அதனால் தான் விஜய் பரப்புரையை திறந்தவெளி திடலில் வைத்திருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, அந்தந்த கட்சியினர் முடிவெடுத்து, போலீஸ் மற்றும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க த.வெ.க.,வின் தவறுதான். அதில் தி.மு.க.,வை குற்றஞ்சாட்டுவது சரியானது அல்ல. யார் எந்த கூட்டணியில் இருந்தாலும், அது குறித்து தி.மு.க., கவலைப்படாது. தி.மு.க., அரசில் யாரையும் தேவையில்லாமல் கைது செய்வதில்லை. ஆதாரத்துடன் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் கட்டாயம் கைது செய்யப்படுவர். யாரும் கட்சி துவங்குவது எளிது; ஆனால், கட்சியை நடத்துவது சாதாரண காரியம் அல்ல. ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு, உடல் முழுக்க கண் இருக்க வேண்டும்; நிறைய சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும். ஜோசியம் கூற முடியாது பல்வேறு குணங்களை கொண்ட, பல்வேறு தொழில் செய்கிற, பல்வேறு விதமான மனிதர்களை உள்ளடக்கியதுதான் ஒரு கட்சி. எல்லோரையும் ஒன்றிணைத்து வழிநடத்தும் கட்சியின் தலைவரே அரசியலில் வெற்றிகரமான தலைவர். அந்த கட்சி வளர்ந்து செழிப்பாக இருக்கும். மற்றபடி, விஜய் எப்போது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்பதெல்லாம் ஜோசியம் சொல்ல முடியாது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ