உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெயலலிதாவை எதிர்த்தது ஏன்? நடிகர் ரஜினி திடீர் விளக்கம்

ஜெயலலிதாவை எதிர்த்தது ஏன்? நடிகர் ரஜினி திடீர் விளக்கம்

புதுக்கோட்டை:''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நான் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உண்டு. இருந்தாலும், ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தான், முக்கியமான காரணம்,'' என நடிகர் ரஜினி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டையில், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், குறும்பட காணொளி வெளியிடப்பட்டது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினி ஆகியோர் குறும்பட காணொளி மூலமாக சிறப்புரையாற்றினர்.அக்காணொலியில் ரஜினி பேசியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு சொந்தமான சத்யா மூவிஸ் பட நிறுவனம் தயாரித்து, நான் நடித்த 'பாட்ஷா' பட விழாவில் பேசினேன். அப்போது, தமிழகத்தில் வெடிகுண்டு வெடித்துக் கொண்டிருந்தது. இந்த ஆபத்தை வெளிப்படுத்தும்விதமாக, வெடிகுண்டு கலாசாரம் குறித்து அதிரடியாக பேசினேன். அப்போது என்னுடன் மேடையில் இருந்தார் அப்போதைய அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன். என்ன பேசுகிறோம் என புரியாமலேயே அதிரடியாக பேசி விட்டேன். இதனால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கோபம் வந்துவிட்டது. ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இது என்னை ரொம்பவும் பாதித்தது. ஆர்.எம்.வீரப்பனை தொடர்பு கொண்டேன். 'என்னுடைய பேச்சால் தான் உங்களுக்கு அமைச்சர் பதவி பறி போய்விட்டது. அதற்காக, ஜெயலலிதாவை சந்தித்து, என்னுடைய விளக்கத்தை சொல்லலாம் என இருக்கிறேன்' என்று கூறினேன்.ஆனால், அது தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தும். அந்த அம்மா நீங்கள் என்ன விளக்கம் சொன்னாலும் ஏற்க மாட்டார். அவரிடம் பேசச் சென்று, உங்கள் மரியாதையை குறைத்துக் கொள்ள வேண்டாம்; அப்படியெல்லாம் பேசி, அதனால் அவர் மனமிறங்கி கொடுக்கும் அமைச்சர் பதவி எனக்கு தேவையில்லை' என, ஆர்.எம்.விரப்பன் கூறினார். ஆக நான், ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஆர்.எம்.வீரப்பன் பதவி நீக்கமே முதன்மையான காரணமாக இருந்தது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
ஏப் 10, 2025 09:30

மக்கள் நலனை பலி கொடுத்து சிஸ்டம் சரியில்லை என்று பேசி அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தி அரசியலை விட்டு ஓடிய சமாச்சாரத்தை விளக்காத நீங்கள் தற்போது இதை பேசுவது உங்களுடைய அடுத்த படம் ரிலீஸ் ஆக ரெடி என நாங்கள் புரிந்து கொள்ளலாமா?


முக்கிய வீடியோ