'தமிழக முதல்வர் ஸ்டாலின், டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டது, அமலாக்கத் துறை ரெய்டில் சிக்கியுள்ள குடும்பத்தினரை காப்பாற்றவே' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேட்டியளிக்க, அதற்கு, டில்லிக்கு சென்றது குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதி, அதன் வாயிலாக பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
'நிடி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க, டில்லிக்கு நான் செல்கிறேன் என்றதுமே, அரசியல் எதிரிகளின் அடிவயிற்றில் புளி கரைத்த உணர்வு ஏற்பட்டு, வன்மத்தை வெளிப்படுத்தி உள்ளனர். 'இத்தனை ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல், இந்த முறை கலந்து கொள்வது ஏன்' என கேள்வி எழுப்பினர்.'டாஸ்மாக் விவகாரத்தில், அமலாக்கத் துறை ரெய்டுகளில் கிடைத்துள்ள ஆவணங்களால் எதிர்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு, பிரதமரை சந்திக்க செல்கிறேன்' எனக் கூறினர். 'வெள்ளைக்கொடி ஏந்திச் செல்கிறார்' என்றும் கற்பனை சிறகுகளைப் பறக்கவிட்டு, அலாதி இன்பம் கண்டனர், அரசியல் எதிரிகள்.இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பதற்கான கூட்டம் என்பதால், டில்லி சென்றேன். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாக, தி.மு.க., ஆட்சியில் நிலைபெற்றிருப்பதாலும், தமிழக மக்களின் பிரதிநிதியாக, முதல்வராக நானும் பங்கேற்றேன். குடும்ப சொந்தங்கள் மீதும், வியாபார கூட்டாளிகள் மீதும், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், சி.பி.ஐ., 'ரெய்டு' நடத்தியதும், சொந்தக் கட்சியினர் உட்பட யாருக்கும் தெரியாமல், அவசரமாக டில்லி பறந்து சென்றவர் பழனிசாமி.இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்பதை வெளிநாடுகளில் வலியுறுத்தும் குழுக்களில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ள இந்திய குழுவுக்கு தலைமை தாங்கி வழிநடத்தி, தன் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார் கனிமொழி.தமிழகத்தின் நிலையை தெரிவித்ததுடன், தமிழகத்திற்கான திட்டங்களையும், நிலுவையில் உள்ளவற்றையும் பிரதமரிடம் நேரடியாகவே வலியுறுத்தினேன். எதற்காகவும் ஓடி ஒளிபவன் நான் அல்ல. மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ., சோதனைகளை துணிவுடன் எதிர்கொண்டு, சட்ட ரீதியான போராட்டத்தின் வாயிலாகத்தான் வென்று வருகிறோமே தவிர, எதிர்க்கட்சியைப் போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.பழனிசாமி கோவையில் அளித்த பேட்டி:
தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என கடந்த மூன்று ஆண்டுகளாக, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை; வீராவேசமாக புறக்கணித்தார். அதனால், எந்த சாதனையையும் அவரால் செய்ய முடியவில்லை. மூன்று ஆண்டு காலமும் நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழகத்தின் நிதித்தேவையை அழுத்தி வலியுறுத்தி இருந்தால், மாநிலத்துக்கு தேவையான நிதியை சங்கடம் எதுவும் இல்லாமல் பெற்றிருக்கலாம்.முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் ஊழல் ஏகத்துக்கும் நடந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றதால், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி உள்ளது. 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களை வைத்து அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.சோதனைக்குப் பின், அமலாக்கத் துறையின் பிடி இறுகுகிறது. இதனால் ஸ்டாலினுக்கு உதறலாகி விட்டது. உடனே, நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். பின், பிரதமர் மோடியையும் டில்லியிலேயே சந்தித்து பேசி உள்ளார். ஆனால், சந்திப்பின் போது இருவரும் என்ன பேசினர் என்பதை, மாநில மக்களுக்கு சொல்ல வேண்டியது முதல்வர் கடமை.அதேபோல, ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம், கருப்பு பலுான் விட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதே ஸ்டாலின், முதல்வர் ஆன பின், பிரதமருக்கு வெள்ளைக்கொடியும், வெண்குடையும் பிடித்துச் செல்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியானால் வேறொரு நிலைப்பாடும் கொண்டவர் தான் ஸ்டாலின். அவர் போடும் இரட்டை வேடத்துக்கு அளவே இல்லை.முதல்வர் ஸ்டாலின் டில்லியில் பிரதமரை சந்தித்து பேசிய பின், 'ஈ.டி.,க்கும், பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டோம்' என, துணை முதல்வர் உதயநிதி உரக்கப் பேசுகிறார். உதயநிதியின் தம்பியாக இருக்கக் கூடியவர், அமலாக்கத் துறை சோதனைக்குப் பின், வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இதையும் உதயநிதி சொன்னால், நாட்டு மக்களுக்கு அதில் என்ன நடக்கிறது என்பது புரியும். இவ்வாறு பழனிசாமி பேட்டி அளித்தார்.- நமது நிருபர் -