உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஆண்டு காலத்தை ஏன் வீணடித்தீர்? எஸ்.ஐ., வேலைக்கு தேர்வானோர் சுளீர்

2 ஆண்டு காலத்தை ஏன் வீணடித்தீர்? எஸ்.ஐ., வேலைக்கு தேர்வானோர் சுளீர்

சென்னை:'போலீஸ் எஸ்.ஐ.,க்கான தேர்வில் குளறுபடி நடந்துள்ளதா; எங்களின் இரண்டு ஆண்டு காலத்தை ஏன் வீணடித்தீர்கள்' என, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திடம், இப்பணிக்கு தேர்ச்சி பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 621 போலீஸ் எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்ய, 2023 மார்ச் 8ல் அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பத்தாரர்களுக்கு எழுத்து தேர்வு, உடல் தகுதி மற்றும் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, பொதுப்பிரிவில் வரும், 31 சதவீத இடங்களுக்கும், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க வேண்டும். அதில், தேர்வர்களின் ஜாதியை பார்க்கக்கூடாது. ஆனால், வாரியம் வெளியிட்ட பட்டியலில், அதிக மதிப்பெண் எடுத்த பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் ஆதிதிராவிட சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியலில் சேர்க்கப்பட்டதால், அந்த சமூகத்தை சேர்ந்த ஆறு பேர், போலீஸ் எஸ்.ஐ.,யாகும் வாய்ப்பை இழந்துள்ளனர். அதேபோல, பெண்களுக்கான இடஒதுக்கீட்டிலும் குளறுபடி நடந்துள்ளது. இதுபற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த தேர்வு பட்டியலை, நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. புதிய பட்டியலை வெளியிட, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் தலைமையில், தனி நபர் கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், 2023 மார்ச் 8ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு, உடல் தகுதி மற்றும் நேர்முக தேர்வில் வெற்றி பெற்று, பணியாணை கிடைக்காமல், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போர், சென்னை எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில், நேற்று மனு அளித்துள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: கடந்த, 2023ல் நடந்த போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான தேர்வுக்கு, 2019ல் இருந்தே எங்களை தயார்படுத்தி வந்தோம். எழுத்து தேர்வு, உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு என, எல்லா தேர்வுகளிலும் வெற்றி பெற்று, பணியாணை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், எங்களின் காத்திருப்பு தான் நீளுகிறது. எங்களின் இரண்டு ஆண்டு காலத்தை ஏன் வீணடித்தீர்கள்; போலீஸ் எஸ்.ஐ.,க்கான தேர்வில் குளறுபடி நடந்துள்ளதா; தனி நபர் கமிஷன் அறிக்கை அளித்தும், புதிய தேர்வு பட்டியல் வெளியிடாமல் இருப்பது ஏன்? இவ்வாறு அதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !