உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புறமுதுகு காட்டி தி.மு.க., ஓடுவது ஏன்? த.வெ.க., தலைவர் விஜய் கண்டனம்

புறமுதுகு காட்டி தி.மு.க., ஓடுவது ஏன்? த.வெ.க., தலைவர் விஜய் கண்டனம்

சென்னை : 'எல்லா மாநிலங்களுக்கும், முன்னோடியாக திகழ்கிறோம் என மார்தட்டும் தி.மு.க., அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் புறமுதுகு காட்டி ஓடுவது ஏன்' என, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அரசு இயந்திரத்தின் அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, நியாயமான தீர்வு காண வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதை தி.மு.க., அரசு செய்ய முன்வரவில்லை. கண் துடைப்புக்காக பேச்சு மட்டும் நடத்திவிட்டு கண்டும், காணாமல் கைவிட்டுவிட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்காக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை கெஞ்சி கூத்தாடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் எனக் கூறினர். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 309வது வாக்குறுதியாக அதை வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்தினர். இப்போது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், லட்சக்கணக்கான குடும்பங்களை, தி.மு.க., அரசு ஏமாற்றி உள்ளது. ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் மீண்டும் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறோம் என, மார்தட்டும் தி.மு.க., அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? தி.மு.க., அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விடுமுறை நாளில் போராட்ட களத்தில் உள்ளனர். இது, மிகப்பெரிய கையறு நிலையாகும். தி.மு.க., அரசுக்கு இது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக, தமிழக வெற்றிக்கழகம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajarajan
மார் 24, 2025 10:20

இதுக்குதான் கொஞ்சமாச்சும் பொருளாதாரம் அறிந்தவர்கள் அரசியலுக்கு வரணும் சொல்றது. உங்க கைகாசை எடுத்து, அரசு ஊழியருக்கு யார் வேணாலும், எவ்வளவு வேணாலும் கொடுங்க. யாரும் தடுக்கல. ஆனால், கடை தேங்காயை எடுத்து, வழிப்பிள்ளையாருக்கு உடைக்க நீங்கள் யார்? இனிமேல் பொதுமக்களின் கஜானாவில் கைவைக்க என்ன இருக்கிறது? போதும், இத்தோடு அரசியல்கட்சிகள் உங்கள் அறியாமையை நிறுத்திக் கொள்ளுங்கள். வீணாக, நீதிமன்றத்தில் அசிங்கப்படாதீர்கள்.


Shekar
மார் 24, 2025 09:41

நாங்க பண்ணை வீட்டுக்குள் உட்கர்ந்து அறிக்கை விடுவோம், அதனால யாரும் எப்பவும் எங்களை முகத்தையே முதுகையோ காட்டி ஓட்டம்முனு சொல்ல முடியாது


Rajah
மார் 24, 2025 08:31

நோன்புக் கஞ்சி குடிக்க அலைவது எதற்காக? இஸ்லாமியர்கள் மீது கொண்டுள்ள பாசத்தினாலா அல்லது அவர்களது வாக்குகளுக்காகவா? நல்லினக்கம் என்ற பெயரில் பிரிவினை வாதம்.


angbu ganesh
மார் 24, 2025 09:52

முஸ்லீம் கிறிஸ்துவர்களுக்கு வோட்டுரிமை இல்லேன்னா சீண்டுவானுங்க இவனுங்க இதை முஸ்லீம் கிறிஸ்துவர்கள் புரிஞ்சிக்கணும்


Rajah
மார் 24, 2025 11:35

மதம் பிடித்திருப்பவர்களுக்கு இந்த திராவிட ஏமாற்றுக்காரர்கள் பற்றி தெரிவதற்கு வாய்ப்பில்லை. திரு அன்பு அவர்களே உங்கள் கருத்திற்கு நன்றிகள் பல.


Bhaskaran
மார் 24, 2025 07:39

முழு பட்ஜெட்டையே கொடுத்தாலும் அரசு ஊழியர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். மண்டபத்தில் யாரோ நல்லா எழுதிக் கொடுத்ததை விஜய் ஒப்பிச்சுருக்காரு .சொந்தமாக குறிப்பு இல்லாமல் பேட்டி குடுக்கும் தலைவர்களே தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இல்லை


D.Ambujavalli
மார் 24, 2025 06:08

இதே வாக்குறுதியை பத்திரமாக, எழுத்து மாறாமல் 26 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக சேர்த்துவிட்டு, இதே அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் தேர்தல் பணிகளை வாங்குவார்கள் திராவிடமா, கொக்கா ?


m.arunachalam
மார் 24, 2025 05:46

யதார்த்தம் உணர்ந்து பேச வேண்டும் , பேச கற்க வேண்டும் .


புதிய வீடியோ