உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு டாக்டர்கள் மீதான தாக்குதலுக்கு எச்.பி.ஏ., சட்டத்தை பயன்படுத்தாதது ஏன்

அரசு டாக்டர்கள் மீதான தாக்குதலுக்கு எச்.பி.ஏ., சட்டத்தை பயன்படுத்தாதது ஏன்

மதுரை: அரசு மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் மீதான தாக்குதலின் போது, தமிழ்நாடு அரசு மருத்துமவனைகள் பாதுகாப்புச்சட்டத்தை (எச்.பி.ஏ.,48) போலீசார் பயன்படுத்தாதது ஏன் என இந்திய மருத்துவ கழக (ஐ.எம்.ஏ.,) தென்மண்டல துணைத்தலைவர் டாக்டர் அழக வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மருத்துவமனைகளுக்கும் அதில் பணியாற்றும் ஊழியர்கள், டாக்டர்களுக்கும் பாதுகாப்பு தருவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 2008 ல் எச்.பி.ஏ., சட்டம் உருவாக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது மருத்துவக் கல்லுாரி டீன் அல்லது நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.,) புகார் செய்தால் இச்சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படிச் செய்யாததாலேயே அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் தாங்கள் பாதிக்கப்படும் போது நீதி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்கிறார் டாக்டர் அழக வெங்கடேசன். அவர் கூறியதாவது: கடந்த வாரம் திருச்சி அரசு மருத்துவமனையில் அரசு சட்டக்கல்லுாரி மாணவி, மருத்துவமனை பணியாளரை தாக்கிய போது திருச்சி போலீசார் எச்.பி.ஏ., சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். அதனால் அங்கு போராட்டம் தவிர்க்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியின் பயிற்சி டாக்டரை தாக்கியவர்கள் மீது இச்சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மதுரை அரசு மருத்துவ மனையில் இதேபோன்று பயிற்சி டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்திய பின்பே அவர்கள் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையை சேதப்படுத்தினாலோ, டாக்டர்கள், ஊழியர்களை தாக்கினாலோ உடனடியாக அவர்களை இச்சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என்பதை போலீஸ் உயரதிகாரிகள் சுற்றறிக்கையாக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்ப வேண்டும். எச்.பி.ஏ., சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை தொடர்ந்தால் டாக்டர்களும் போராட்டத்தை கைவிட்டு சிகிச்சையில் மட்டும் கவனம் செலுத்த முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ