ரேஷன் கடைகளில் பொருட்கள் எடை போட்டு வழங்க தாமதம் ஏன்? சக்கரபாணி விளக்கம்
சென்னை:''கிராமப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் எடையாளர்கள் இல்லாததால், விற்பனையாளரே 'பில்' போட்டு, அவரே பொருட்களை எடை போடுவதால் காலதாமதம் ஏற்படுகிறது,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:அ.தி.மு.க., - நல்லதம்பி: தமிழகம் முழுதும் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில், பி.ஓ.எஸ்., எனும் விற்பனை முனைய கருவியுடன் மின்னணு எடைத்தராசு, 'புளூடூத்' வாயிலாக இணைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறையில், பொதுமக்கள் கைரேகை வைத்தபின், அவர்களுக்கான பொருட்களை தராசில் வைத்து, 'பில்' போட்டு பணம் பெற்றுக் கொள்ளும் நிலை உள்ளது. இதில் காலதாமதம் ஏற்படுவதால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.அமைச்சர் சக்கரபாணி: நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், 'பயோமெட்ரிக்' முறையில், கைரேகை பதிவு செய்து பொருட்களை வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அ.தி.மு.க., ஆட்சியில், 60 சதவீத பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசு வலியுறுத்தியதால், இப்போது 99.6 சதவீதம் கைரேகை பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. கைரேகை பதியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு வாயிலாகவும் பொருட்களை வாங்கலாம்.நகரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், எடையாளர்கள் உள்ளனர். அங்கு விற்பனையாளர் 'பில்' போட்ட பின், எடையாளர் பொருட்களை தருவதால், மக்கள் எளிதாக வாங்குகின்றனர். கிராமப் பகுதிகளில் எடையாளர்கள் இல்லாததால், விற்பனையாளரே 'பில்' போட்டு, அவரே எடை போடுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பொருட்கள் வாங்க சிரமப்படுவதாக, எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கோரிக்கை வைத்து உள்ளனர். எனவே, கிராமப் பகுதிகளில், 500 முதல் 800 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள கடைகளுக்கு, எடையாளர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.