உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அழகிரி ஆதரவாளர்களை கட்சியில் சேர்ப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

அழகிரி ஆதரவாளர்களை கட்சியில் சேர்ப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

மதுரை: தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள், தங்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இன்று மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின், பொதுக்குழு கூட்டத்தை முடித்த பின் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என, அவர்கள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.மத்திய அமைச்சராக இருந்து, தென் மாவட்ட தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அழகிரி, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக 2014ல் நீக்கப்பட்டார். அவருடன் சேர்த்து, அவருக்கு நெருங்கிய ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இவர்கள் வேறு கட்சிக்கு செல்லாமல் தி.மு.க.,வில் அழகிரி விசுவாசிகளாகவே உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன் மன்னன், இசக்கிமுத்து உட்பட முக்கிய ஆதரவாளர்கள், தங்களை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கோரி கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதம் அளித்தனர். அதில் முதல்வர் ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருப்போம் எனவும் உறுதிஅளித்தனர்.

அழகிரி ஆதரவாளர்களின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

அழகிரி - ஸ்டாலின் இடையே சமாதானம் ஏற்பட்டு இரண்டு முறை நேரிலும் சந்தித்துவிட்டனர். ஆனாலும், அழகிரி ஆதரவாளர்களை கட்சியில் சேர்ப்பது தள்ளிக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில், இன்று மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின், அழகிரியை அவரது வீட்டில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அப்போது, எங்கள் நிலை குறித்து ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி, கட்சியில் சேர்க்கும்படி அழகிரி கூறினால், ஸ்டாலின் நல்ல முடிவெடுத்து எங்களை கட்சியில் சேர்த்துக் கொள்வார். கூடவே, பொதுக்குழுக் கூட்டத்திற்கு பின், மதுரையிலேயே மகிழ்ச்சியான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என, நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை