ஆன்லைன் ஆர்.டி.ஐ., மனுக்கள் கிடைப்பதில் தாமதம் தவிர்க்கப்படுமா?
சென்னை: இணையதளத்தில் பதிவு செய்யப்படும் ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, பொதுமக்கள் தங்கள் மனுக்களை காகித வடிவில் அனுப்புவதைவிட, 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்யும் வசதி, 2022ல் துவங்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் மனுக்களை, rtionline.tn.gov.in/ என்ற இணைய தளம் வாயிலாக பதிவு செய்யலாம். முதற்கட்டமாக, சென்னை தலைமை செயலக நிலையில் உள்ள துறைகள் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மற்ற நிலை அரசு அலுவலகங்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வசதியை பயன்படுத்தி இதுவரை, 69,327 மனுக்களும், 17,395 மேல்முறையீட்டு மனுக்களும் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், ஆன்லைன் முறையில் பதிவாகும் மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறியதாவது:
கடிதம் வாயிலாக மனுக்களை பெறுவதற்கு பதிலாக, ஆன்லைன் வசதி துவங்கப்பட்டது நல்லது தான். இதில் பதிவாகும் மனுக்களை, சம்பந்தப்பட்ட துறைகள் நேரடியாக பெற முடியாத நிலை உள்ளது. ஆன்லைன் முறையில் பதிவாகும் மனுக்களை, பொதுத்துறையில் உள்ள ஒரு அதிகாரியால் தான் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அலுவலருக்கு கிடைப்பதற்கு, சில நாட்கள் தாமதம் ஆகின்றன. ஆன்லைன் வசதியில் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறையால், மனுக்கள் கிடைப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது. தானியங்கி முறையில் மனுக்கள், பொது தகவல் அலுவலருக்கு நேரடியாக செல்லும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.