உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு விற்பனையை முடக்கும் பணியாளர்கள்; நடவடிக்கையில் இறங்குமா வீட்டுவசதி வாரியம்?

வீடு விற்பனையை முடக்கும் பணியாளர்கள்; நடவடிக்கையில் இறங்குமா வீட்டுவசதி வாரியம்?

சென்னை : விற்காத வீடுகளை விற்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பணியாளர்கள் அதை முடக்குவதாக, பொது மக்கள் புகார் தெரிவித்தனர். தமிழக வீட்டுவசதி வாரியத்தில், சில ஆண்டுகளுக்கு முன், சுயநிதி முறையில் வீடுகள் கட்டப்படும் முறை அமலுக்கு வந்தது. இதில், பயனாளிகள் குறைவாக உள்ள திட்டங்களில், வாரிய நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னுரிமை இந்நிலையில், தமிழகம் முழுதும் வாரிய திட்டங்களில், 10,000 வீடு, மனைகள் விற்காமல் உள்ளன. இந்த வீடுகளை விற்பனை செய்யாததால், வாரியத்தின் நிதி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், வீடு, மனைகளை விற்பனை செய்ய, வாரியம் முடிவு செய்தது. இதற்காக, வீடு, மனைகளின் விபரங்களை, இணையதளத்தில் வாரியம் வெளியிட்டது. இந்த விபரங்களை பார்த்து, பொது மக்கள் வீடு, மனைகளை தேர்வு செய்கின்றனர். இறுதி முடிவுக்கு முன், வீட்டை பார்க்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக மக்கள், சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு சென்றால், அங்குள்ள பணியாளர்கள் வீடுகளை காட்ட மறுப்பதாக புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் விபரத்தை, வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் உள்ள வீடுகளை பார்க்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டோம். பணியாளர் கோட்ட அலுவலக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட திட்ட பகுதியில் உள்ள பணியாளர்களை அணுக சொல்கின்றனர். அங்கு சென்றால், பணியாளர்கள், முறையாக ஒத்துழைப் பதில்லை. இணையதளத்தில் பார்த்து உறுதி செய்த வீட்டை கூட, ஏற்கனவே வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டதாக கூறி, திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருக்கின்றனர். வீடுகள் விற்பனையாவதை தடுக்கும் நோக்கிலேயே கள பணியாளர்கள் செயல்படுகின்றனர். வீடுகளை விற்க வேண்டும் என்று, உயரதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், இதுபோன்ற பணியாளர்களால் முடங்கும் சூழல் காணப்படுகிறது. தவறு செய்யும் பணியாளர்கள் மீது, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 'வெப்சைட்' தண்டம் வீட்டுவசதி வாரிய இணையதளத்தில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளின் விபரங்கள் வெளியிடப்பட்டன. இதில், வீடுகளின் எண்ணிக்கை, விலை விபரங்கள் மட்டுமே உள்ளன. இந்த விபரங்கள் போதுமானதாக இல்லை. எந்த திட்டத்தில், எந்த வீடு தற்போது விற்பனைக்கு தயாராக உள்ளது என்ற அளவில், துல்லியமான விபரங்கள் இல்லை. இதன் அடிப்படையில், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள பகுதிக்கு சென்றால், அந்த வீடுகள் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகளை, அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என, பொது மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ