உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவிக்க விட்ட காற்றாலை; திணறவிட்ட மத்திய அரசு

தவிக்க விட்ட காற்றாலை; திணறவிட்ட மத்திய அரசு

மத்திய தொகுப்பு மின்சார குறைவு, நிலக்கரி சப்ளையில் பாதிப்பு, தெலுங்கானா போராட்டம் என பல பிரச்னைகளால், தமிழக மின்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதால், தமிழக அரசு பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி தினமும், நிலையாக இருப்பதில்லை. தமிழகத்தில் 6,000 மெகாவாட் திறனில் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், 2,300 மெகாவாட் உற்பத்தியாகிறது. இந்த அளவு, தினமும் இயற்கை தட்பவெப்பநிலையால் மாறுபடுகிறது. வழக்கமாக அக்டோபர் மூன்றாவது வாரத்திலிருந்து, காற்றாலை மின் உற்பத்தி குறையும். இந்த ஆண்டு செப்டம்பர் துவக்கத்திலேயே குறைந்து விட்டது. கடந்த இருதினங்களாக வெறும், 150 மெகாவாட்டுக்கு காற்றாலை மின்சாரம் குறைந்ததால், மின்துறை அதிகாரிகளால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. நேற்று, காற்று வீசுவது அதிகரித்ததால், சராசரியாக 400 மெகாவாட் உற்பத்தியானது. இதே போல், மத்திய தொகுப்பில் 2,386 மெகாவாட் தமிழகத்திற்கு வர வேண்டும். இதில், கடந்த வாரத்தில் பெருமளவு குறைவாகவே கிடைத்தது. நேற்று முன்தினம் தாராளமாக கிடைத்த மத்திய மின்சாரம், நேற்று, மீண்டும் 1,000 மெகாவாட் குறைந்தது. எனவே, மீண்டும் கூடுதல் மின்தட்டுப்பாடு ஏற்பட்டு, கூடுதலாக விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 'மத்திய அரசால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா பிரச்னையை தீர்க்கவும், முடங்கிய நிலக்கரி வினியோகத்தை தொடரவும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நெருக்கடி நிலையை மத்திய அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை. ஆனாலும், மத்திய அரசின் உதவிகளை எதிர்பார்க்காமல், விலைக்கு வாங்கியாவது மின்சார தேவையை சரி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்' என்றார். நேற்றைய நிலவரப்படி, காற்றாலை மூலம், 400 மெகாவாட் கிடைத்தது. இது, கடந்த வாரத்தை விட 1,500 மெகாவாட் குறைவு. இதேபோல், மத்திய மின்தொகுப்பிலிருந்து, நேற்று 1,400 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இது, தமிழக அரசுக்கான ஒதுக்கீட்டில், 1,000 மெகாவாட் குறைவு. இந்த வகையில் மட்டும், 2,500 மெகாவாட் மின்சார வரத்து திடீரென குறைந்து, பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஆந்திராவில் உள்ள மத்திய மின் நிலையத்திலும், சுரங்கத்திலும் பணிகள் துவங்குவதற்கு சாத்தியமில்லை. இதேபோல், ஒடிசா சுரங்கத்தில் வெள்ளம் வடிந்த பின் தான் பணிகள் துவங்கும்; ஆனாலும் பணிகள் துவங்கி ஒரு வாரத்திற்கு பின்னர் தான், தமிழகத்திற்கு நிலக்கரி கிடைக்கும். இதன் பின்னரே தமிழக மின் நிலைய உற்பத்தியும் அதிகரிக்கும். எனவே, தற்போதைய மின்சார தட்டுப்பாட்டை, அதிக விலை கொடுத்துதான் சமாளிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு, தமிழக மின்துறை தள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை