உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடமாற்றம் செய்யப்பட்டனர் போலீஸ் ஏட்டுகள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனைவியர்

இடமாற்றம் செய்யப்பட்டனர் போலீஸ் ஏட்டுகள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனைவியர்

சேலம் : சேலத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட ஏட்டுகளின் மனைவியர், கணவன்களின் பணி மாற்றத்துக்கு உரிய காரணம் கேட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் போலீஸ் நடத்திய விசாரணையின் போது, ராஜமரியாதை அளிக்கப்பட்ட விவகாரம், முதல்வரை ஆபாசமாக சித்தரித்து, தி.மு.க.,வினர் நடத்திய நடனம் ஆகியவை காரணமாக, சேலம் மாநகர போலீசில் இடமாற்ற நடவடிக்கை தொடர்கிறது. இந்த விவகாரத்தின் காரணமாக, நேற்று வரை, 15 இன்ஸ்பெக்டர்கள், 16 எஸ்.ஐ., - எஸ்.எஸ்.ஐ.,க்கள், 23 ஏட்டுகள் உட்பட, மொத்தம், 54 பேர், அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், பல நேர்மையான ஏட்டுகள், தி.மு.க., அனுதாபிகள் என முத்திரை குத்தப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பணி மாற்றம் செய்யப்பட்ட ஏட்டுகளில், பத்துக்கும் மேற்பட்டோரின் மனைவியர், தங்கள் குழந்தைகளுடன், நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் மனு கொடுத்தனர்.

இது குறித்து ஏட்டுகளின் மனைவியர், நிருபர்களிடம் கூறியதாவது: எங்களின் கணவன்மார்களை பணி மாற்றம் செய்ய வேண்டாம் என, நாங்கள் கூற வில்லை. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பணி மாற்றம் செய்திருந்தால் பரவாயில்லை. திருநெல்வேலி, ராமநாதபுரம் என, தொலை தூர மாவட்டங்களுக்கு மாற்றியுள்ளனர். இதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான், எங்கள் கணவன்மார்கள் வேலை செய்கின்றனர். ஆனால், முன்னாள் அமைச்சரோ, அவரின் ஆதரவாளர்கள் மீதோ நடவடிக்கை எடுக்க, கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவர்களின் உத்தரவை, எங்கள் கணவன்மார்கள் நிறைவேற்றவில்லை என்றால், நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விடுத்து, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் இருந்ததோடு, பலன்களையும் பெற்றுக் கொண்டு, அவர்கள் தப்பிக்க, எங்கள் கணவன்மார்களை பழி தீர்த்துக் கொண்டனர்.

தற்போது, எங்கள் குழந்தைகள் பள்ளியிலும், வயதான நிலையில் வீடுகளில் உள்ள முதியவர்களை பார்ப்பதற்கு, எங்கள் கணவன்மார்கள் அருகில் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பணி மாற்றத்துக்கான காரணத்தை, எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கமிஷனர் சொக்கலிங்கம் கூறுகையில், ''போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களை மாற்றம் செய்ய, பல காரணங்கள் இருக்கும். எந்த காரணத்தையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காகவே பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி