விடுதலை புலிகள் அமைப்புக்கு ரூ.42 கோடி மாற்ற முயன்ற பெண்: ஈ.டி., விசாரணையில் தகவல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த உமா காந்தன் கட்டளைப்படி, மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து, அந்த அமைப்பினருக்கு, 42 கோடி ரூபாயை மாற்ற முயன்றோம்' என, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான இலங்கை பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில், 2019ல் சென்னைக்கு வந்தவர் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 45. இவரும், இவரது கூட்டாளிகளும், அண்ணா நகரில் வீடு எடுத்து தங்கினர். விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த இவர்களில், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 2022ல், சென்னை விமான நிலையத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்ல முயன்றார். அப்போது அவரை, தமிழக கியூ பிரிவு போலீசார், சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். தொடர்ந்து அவரின் கூட்டாளிகள் ஐந்து பேரையும் கைது செய்தனர். பின், இவர்கள் தொடர்பான வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா மற்றும் அவரது கூட்டாளிகள், விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதனால், லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா உள்ளிட்டோர் மீது, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்தனர்.தற்போது, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லட்சுமணன் மேரி பிரான்சிஸ்காவிடம், அமலாக்கதுறையினர் விசாரணை நடத்திய போது, அவர் அளித்துள்ள வாக்குமூலம்: ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், எங்கள் அமைப்பை சேர்ந்த உமா காந்தன் தங்கி உள்ளார். அவர் பிறப்பித்த கட்டளைப்படியே செயல்பட்டு வந்தோம். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஹமிதா ஏ லால்ஜி என்பவர் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்; அவர் இறந்து விட்டார். ஆனால், லால்ஜியின் வங்கி கணக்கில், 42 கோடி ரூபாய் இருப்பது உமா காந்தனுக்கு தெரியவந்தது. இந்த பணத்தை விடுதலை புலிகள் அமைப்புக்கு மாற்ற, நான் உட்பட ஐந்து பேரை கருவியாக பயன்படுத்தினார். லால்ஜியின் பணத்தை, 'ஆன்லைன்' வாயிலாக எங்கள் அமைப்புக்கு மாற்ற முயன்றோம். அதற்காக போலி ஆவணங்கள் வாயிலாக, லால்ஜியின் பெயரில், 'சிம் கார்டு' வாங்கினோம்.அதை பயன்படுத்தி, பணத்தை எடுக்க முயன்ற போது, எங்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால், லால்ஜியின் வாரிசு நான் என்பது போல சான்றிதழ் தயார் செய்தோம். இந்த சான்றிதழை பயன்படுத்தி பணத்தை எங்கள் அமைப்புக்கு மாற்ற, சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து மும்பை செல்ல இருந்தேன். ஆனால், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.