சென்னை: தமிழகத்தில், ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதற்காக, கடந்த 10 நாட்களில், 5,631 பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஆண்களுக்கு இணையாக தமிழக பெண்களும் சுய தொழில் துவங்க ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது. தமிழக பொருளாதார வளர்ச்சியில், பெண்களின் பங்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கும் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. நிவாரணம் இத்திட்டத்தை, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தொழில் வணிக ஆணையரகம் செயல்படுத்துகிறது. அதன்படி ஆண்டுக்கு, 20,000 பேருக்கு, 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகளில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 25 சதவீதம் அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிக்கு, தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக திறன் பயிற்சி அளிக்கப்படுவதுடன், தொழில் பதிவு, சந்தைப்படுத்துதல் உதவிகள், பேம் டி.என்., நிறுவனம் செய்ய உள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபரின் பெயர், ரேஷன் கார்டில் இருப்பதுடன், வயது, 18 முதல், 55க்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி கிடையாது. உற்பத்தி, சேவை, வணிகம் ஆகிய பிரிவுகளில் தொழில்களை துவங்கலாம். விண்ணப்பதாரரின் தொழில் திட்டங்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, கடன் வழங்க, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவர். கடன் வழங்க விண்ணப்பம் பெறும் பணி, கடந்த, 10 நாட்களுக்கு முன் துவங்கியது. இத்திட்டத்தில் கடன் பெற்று தொழில் துவங்க, பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பரிந்துரை இதனால், கடந்த 10 நாட்களிலேயே, 5,631 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவற்றை பரிசீலனை செய்ததில், 1,891 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 65 பேருக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற, www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.