ரூ.1,000 கிடைக்காத மகளிர் ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை:''தமிழகத்தில், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:கொ.ம.தே.க., - ஈஸ்வரன்: தமிழக அரசு மாதந்தோறும் வழங்கும், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகையால், பெண்கள் பயனடைந்து வருகின்றனர். விடுபட்டுள்ள தகுதியான பெண்களுக்கும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின்: தமிழகத்தில், ஒரு கோடியே, 14 லட்சம் பேருக்கு, மாதம், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த எல்லாருக்கும் கிடைத்து வருகிறது. அதில் விடுபட்டவர்களுக்கும், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, சட்டசபையிலும் இதுபற்றி பேசப்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு, 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தின்கீழ், பொது மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை உடனடியாக நிறைவேற்றும் பணிகளை, நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். வரும் ஜூன் மாதத்தில் நான்காம் கட்டமாக, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் கோரிக்கைகளை கேட்கும் பணிகள், 9,000 இடங்களில் துவங்க உள்ளன. அப்போது, 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் விடுபட்டிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால், நிச்சயமாக விரைவில் வழங்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.