உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சரான செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டாரா?

அமைச்சரான செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைக்க மாட்டாரா?

சென்னை : அமைச்சரவையில், முதல் மூன்று இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் முதல் ஐந்து இடங்களிலோ, பட்டியலினத்தவரை நியமிக்கும்போதுதான், சமூகநீதி பேசும் தகுதி தி.மு.க.,வுக்கு வரும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க.,வில் உள்ள 131 எம்.எல்.ஏ.,க்களில், பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களின் எண்ணிக்கை 23; அதாவது 17.55 சதவீதம். மொத்தமுள்ள 34 அமைச்சர்களில், ஆறு அமைச்சர் பதவிகள் வன்னியருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; வெறும் மூன்று அமைச்சர் பதவிகள் மட்டும்தான் வன்னியர்களுக்கு தரப்பட்டுள்ளன.தி.மு.க.,வில் பட்டியலின, பழங்குடியின எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 21. வன்னியர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரும்பான்மை அவர்கள் தான். எனவே, 16 சதவீதம் கொண்ட அவர்களுக்கு, ஐந்து அமைச்சர் பதவிகளாவது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அமைச்சரவையில், அவர்களுக்கான பிரதிநிதித்துவம், மூன்று மட்டும் தான் என்பதும் சமூக அநீதி. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனும், பட்டியலினத்தைச் சேர்ந்த கோவி.செழியனும் அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதனால், வன்னியர், பட்டியலினத்தவர் பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும் இதுவும் கூட போதுமானதல்ல.பட்டியலினத்தவர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டாலும்கூட, அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத துறைகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.அமைச்சரவையில், முதல் மூன்று அல்லது ஐந்து இடங்களிலோ பட்டியலினத்தவரை நியமிக்கும்போதுதான், சமூகநீதி பேசும் தகுதி தி.மு.க.,வுக்கு வரும்.சிறையில், இலாகா இல்லாத அமைச்சராக இருந்த போதே சாட்சிகளை கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது ஜாமினில் வெளிவந்து, அமைச்சராக அதிகாரம் செலுத்தும்போது, சாட்சிகளை கலைக்க மாட்டாரா? அவருக்கு எதிரான வழக்குகளில், சாட்சிகளை கலைப்பது உள்ளிட்ட சட்டத்தை வளைக்கும் செயல்களில் ஈடுபடுகிறாரா என்பதை நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் கண்காணிக்க வேண்டும்.அத்தகைய செயல்களில் ஈடுபட்டால், அதை உரிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி