உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 மாவட்டங்களில் 25 புதிய வருவாய் கிராமங்கள் வருவாய் துறையில் பணிகள் துவக்கம்

8 மாவட்டங்களில் 25 புதிய வருவாய் கிராமங்கள் வருவாய் துறையில் பணிகள் துவக்கம்

சென்னை:தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், 25 புதிய வருவாய் கிராமங்கள் ஏற்படுத்தும் பணிகளை, வருவாய் துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில் வருவாய் நிர்வாகமானது, மாவட்டம், கோட்டம், தாலுகா, குறுவட்டம், கிராமம் என பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 38 மாவட்டங்களில், 94 கோட்டங்கள், 316 தாலுகாக்கள் உள்ளன.

கட்டமைப்பு வசதி

இதற்கு அடுத்த நிலையில், 1,207 குறு வட்டங்கள், 17,653 வருவாய் கிராமங்கள் உள்ளன. பொதுவாக கிராமங்கள் எனும் போது, ஏராளமான குக்கிராமங்கள் வரும். ஆனால், மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு கூறுகள் அடிப்படையில், குறிப்பிட்ட சில இடங்கள் தான் வருவாய் கிராமங்கள் என்று அறிவிக்கப்படுகின்றன.இவ்வாறு ஒரு பகுதி, குக்கிராமமாக இருப்பதை விட, வருவாய் கிராமமாக அறிவிக்கப்படும் போது, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது எளிதாகிறது. இதன் அடிப்படையில், வளர்ந்து வரும் குக்கிராமங்களை, வருவாய் கிராமங்களாக அறிவிக்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கோரிக்கை வருவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், எட்டு மாவட்டங்களில் உள்ள 25 பகுதிகள், புதிய வருவாய் கிராமங்களாக உயர்த்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

மக்கள் தொகை உயர்வு

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்கள்தொகை உயர்வு உள்ளிட்ட தகுதிகள் அடிப்படையில், பல்வேறு குக்கிராமங்கள், வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், எட்டு மாவட்டங்களில் 25 இடங்கள், புதிய வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட உள்ளன.மதுரையில், 9; சேலத்தில், 5; கோவையில், 4; செங்கல்பட்டில், 3; திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களில், தலா ஒன்று என மொத்தம், 25 கிராமங்கள் வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட உள்ளன. புதிய வருவாய் கிராமங்களை அறிவிக்கும் போது, அதனுடன் இணைக்கப்படும் குக்கிராமங்களையும் அடையாளப்படுத்த வேண்டும். இது தொடர்பான பணிகள், தாலுகா நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ